×

போருக்கு எதிராக பூந்தோட்டம்

நன்றி குங்குமம் முத்தாரம்

சில நாட்களுக்கு முன்பு டெல்லி ஜெ.என்.யூ போராட்டத்தில் ஒரு பெண்,  பாதுகாப்பு அதிகாரியை நோக்கி ரோஜா ஒன்றை கொடுத்தார். அது இந்தியா முழுவதும் வைரலாகி அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாக ரோஜாவை இளைஞர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் பாலஸ்தீனத்தில் ஒரு பெண் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதமாக பூக்களைப் பயன்படுத்தி வருகின்றார்.  இஸ்ரேல் அதன் அண்டைய அரபு நாடான பாலஸ்தீனத்தின் மீது  நூற்றாண்டாக போர் நடத்தி வருகின்றது. அந்தப் போரில் கிட்டத்தட்ட இஸ்ரேல் வென்றது. அதன் எல்லையை இஸ்ரேல் இன்னமும் விரிவு   படுத்திக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் எல்லை ஆக்கிரமிப்பை மிகக்
கொடூரமாக மக்கள் மீது மேற்கொண்டு வருகிறது இஸ்ரேல்.

தங்கள் நாட்டைக் காத்துக்கொள்ள தற்காப்புக்காக சில நேரம் தாக்குதலை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம். அதனால் நாங்களும் போரில் இறங்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. சுற்றியுள்ள அரபுநாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து புதிய நாடாக உருவாகிக்கொண்டிருந்த தன்னை பாதுகாப்பதற்கான போர் அது என்றது இஸ்ரேல். ஆனால், பாலஸ்தீனியர்களோ, இஸ்ரேலின் 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பால் மனம் நொந்து போரை எதிர்கொள்கின்றனர். இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்களைத் தாக்குவதற்கு பயன்படுத்திய கண்ணீர்ப் புகைக் குண்டுகளின் ஓடுகளைச் சேகரித்து பூந்தோட்டத்தையே உருவாக்கியுள்ளார் பாலஸ்தீன பெண் சபிஹா அபு ரஹ்மா.பாலஸ்தீனத்தின் தலைநகர் ரமல்லாவிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வெஸ்ட் பேங்க். அதன் அருகில் உள்ள பாலைவன வறண்ட கிராமம்தான் ‘பிலின்’. இப்போது பிலின் கிராமமே செஞ்சோலையாக பூத்துக்குலுங்குகின்றது.

இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களின் 70 சதவீதத்தை 2004-ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அன்றிலிருந்து தங்களது நிலங்களை மீட்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  பலநூறு கிராம மக்கள் நிலங்களைத் திருப்பித் தாருங்கள் என போராட்டம் செய்து வருகின்றனர்ஒவ்வொரு முறையும் பலநூறு கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசுகிறது இஸ்ரேல். ஒவ்வொரு வாரமும் சிலர் இறந்துகொண்டே இருக்கின்றனர். ஆனால் பாலஸ்தீனர்கள தங்களது அறப்போராட்டத்தை நிறுத்துவது இல்லை. ஒரு கட்டத்தில் அறப்போரட்டத்தின் போது இஸ்ரேல் வீசும் கண்ணீர்ப் புகை குண்டுகளின் ஓடுகள் மலைபோல குவிந்து கொண்டே போனது. அதுதான் இப்போது ஆயுதமாக மாறி ரோஜா பூங்கொத்துகளாக மலர்கிறது.ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்கள் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான கண்ணீர்ப் புகை குண்டுகளை இஸ்ரேல் வீசியது.

அப்போது அதில் கொல்லப்பட்டவர் பாஸிம். அவர் நினைவாக இந்தப் பூந்தோட்டத்தை உருவாக்கி அதில் கிடைக்கும் செடிகளை, பூக்களை அமைதியை விரும்பும் மக்களுக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும், காவலர்களுக்கும் கொடுக்கிறார் அவரது அம்மா அபு ரஹ்மா. போருக்கு எதிரான ஆயுதமாக இந்த பூந்தோட்டம் உருவாகியுள்ளது. பாலஸ்தீனம் முழுவதும் உள்ள மக்கள் இப்போது இந்த தோட்டத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். இஸ்ரேல் மக்களிடமும் இந்த தோட்டம் மனதளவில் அன்பை உருவாக்கியுள்ளது. ‘‘என் மகன் நினைவாகவும் நிலத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் நினைவாகவுமே இந்த பாலைவனச் சோலையை உருவாக்கியுள்ளேன். கண்ணீர்ப் புகை குண்டுகள் இன்றி எங்களது வாழ்க்கையை அமைக்க முடியும். கண்ணீர்ப் புகை குண்டுகள் மக்களைக் கொல்லக்கூடியது. நாங்கள் அதற்குள் பூச்செடிகளை நட்டுள்ளோம். அன்பை ஆழ மாக நடுகின்றோம்...’’ என உரக்கச் சொல்லி வருகின்றார் அபு ரஹ்மா.

Tags : Gardening Against War , A few days ago, a woman gave a rose to the security guard at a Delhi JNU protest.
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...