×

மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள்!

* சித்தரத்தை  

நுரையீரல், மூச்சுக்குழாய் போன்ற உள்ளுறுப்புகளில் சேரும் சளியை அகற்ற வல்லது. வாயில் ஏற்படுகிற துர்நாற்றத்தைப் போக்குவதோடு,  உடலுக்கும் குளிர்ச்சியைத் தரும்.

* வெட்டிவேர்

உடற்சூட்டை அகற்றி குளிர்ச்சியைப் பெற உதவும் மூலிகை வெட்டிவேர். இந்த வேரினைச் சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது வழக்கம்.  நீரில் காணப்படுகிற தூசிகளையும், அழுக்கையும் அகற்ற வல்லது. சுத்தமான வெள்ளைத்துணியில் சிறிதளவு வெட்டிவேர், கழற்சிகாய் மற்றும்  நன்னாரி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கட்டி, குடிநீரில் போட்டு ஊற வைத்து, நான்கைந்து நாட்கள் அந்நீரைக் குடித்தால் நல்ல பலன் கிட்டும்.  சுத்தமான தண்ணீரைத் தேடி அலைய வேண்டியதும் இல்லை. குளிர்ச்சி என்று ஃப்ரிட்ஜை நாட வேண்டியதும் இல்லை.

* நீர் நொச்சி

மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகை எந்த விஷப்பூச்சிகளையும் தான் இருக்கும் இடத்தில் அண்ட விடாது. இதனால்தான் இதனைத்  தோட்டத்திற்குக் கிராமங்களில் வேலியாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீர் நொச்சி மற்றும் போன்சாய் முறையில்  வளர்க்கப்படும் மூங்கில் ஆகியவை ஆக்சிஜனை அதிகளவில் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட தாவர வகைகள் ஆகும். எனவே, காற்றை  சுத்திகரிக்கவும் இதை பிரதானமாகப் பயன்படுத்தலாம்.

* பேய் மிரட்டி

பெயரைப் படித்ததும் அச்ச உணர்வு தோன்றுகிறதா? அப்படியெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தீய சக்திகளை வீடுகளில் வர  விடாது என்ற நம்பிக்கை காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம். கிராமங்களில் இதனை, திருஷ்டி கழிவதற்காக வீடுகளில் கட்டுவதை இன்றும்  பார்க்க முடிகிறது. உண்மையில் இச்செடியானது கொசுவை விரட்டும் திறன் கொண்டது. குடியிருப்பு பகுதிகளில் கொசுக்கள் நுழைவதைத் தடுக்க  இம்மூலிகையின் இலையைத் திரியாக எரிப்பது வழக்கம்.

* ரணகள்ளி

சிறுநீரகங்களில் உண்டாகும் கல்லைக் கரைக்கிற தன்மை இதற்கு உண்டு. வீக்கம் உள்ள இடத்தில் வெள்ளைத்துணியில் வைத்து, இவ்விலையைக் கட்டுப்போட, உடனடி தீர்வு கிடைக்கும். பொதுவாக மூலிகைச் செடி என்றால் ஆணிவேருடன் நட்டால்தான் வளரும். ஆனால், இதன் இலையை  மட்டும் தனியாக நட்டால்கூட வளரும் தன்மை கொண்டது.

*எலும்பு ஒட்டி

இந்த மூலிகையின் பெயரைப் படித்ததுமே எதற்காக, இது பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு சொல்லாமலே புரிந்து இருக்கும். ஆம்! கை,  கால்கள் மற்றும் தோல் பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையின் சாறில், வெள்ளைத்துணியை நனைத்து கட்டி வந்தால்  நாளடைவில் முறிந்த எலும்புகள் விரைவில் இணையும். எலும்பு கூடுவதற்கு சில இயற்கை வைத்தியத்தில் கட்டு போடுவதுண்டு. அதில் இந்த  மூலிகை எண்ணெயை ஏதேனும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.

* கேசவர்த்தினி

பெயரிலேயே புரியும். தலைமுடிக்கு உகந்தது இந்த கேசவர்த்தினி. முடிக்கு கறுப்பு நிறம் தரும். கேசவர்த்தினி, மருதாணி, கரிசலாங்கண்ணி போன்ற  மூலிகைகளின் சாறினை சம அளவில் சுத்தமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான அளவுக்கு தேங்காய்  எண்ணெய் கலந்து தேய்த்து வந்தால் நிரந்தர பலன் கிடைக்கும். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களும் இதைப் பின்பற்றலாம்.  

* நித்ய கல்யாணி

நம்முடைய பாரம்பரிய வைத்தியமான சித்த வைத்தியத்தில், புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துப்பொருட்களைத் தயாரிக்க உதவும்  மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அருமையை உணர்ந்த வெளிநாட்டினர், தற்போது அதிகளவிலான நித்ய கல்யாணியைத்  தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டிலேயே வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

* திருநீற்றுப்பச்சிலை

சளி உட்பட பலவிதமான சுவாச கோளாறுகளுக்கு மிகவும் ஏற்றது. காற்றைத் தூய்மைப்படுத்தும் குணம் உடைய இந்த மூலிகையை அழகுக்காகவும்  வீட்டின் முன்பக்கத்தில் வளர்க்கலாம். நாசியைச் சுண்டி இழுக்கும் வாசனை இதற்கு உண்டு. தெய்வ வழிபாடுகளில் பயன்படுத்தப்படுவதால் தெய்வீக மூலிகை என்றும் அழைப்பார்கள்.

* சர்க்கரைக் கொல்லி

சர்க்கரை நோய் அதிகரித்து வரும் சூழலில் வீட்டில் அவசியமாக இருக்க வேண்டிய செடி இது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள்  வைக்க இதன் இலைகள் உதவும். இம்மூலிகையை உட்கொள்ள நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. வாய்ப்பு கிடைக்கும்போது எந்த நேரமும்  உண்ணலாம். சர்க்கரைக் கொல்லி மூலிகை சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. அப்போதுதான் இம்மூலிகையின் பலன்  முழுதாகக் கிடைக்கும். சர்க்கரைக் கொல்லி பயன்படுத்தும்போது டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவ குணம் நிறைந்த இந்த  மூலிகையின் அனைத்துப் பயன்களையும் ஒருவர் பெற, அலோபதி முறையில் வேறு ஏதேனும் சிகிச்சை பெறாதவராக இருக்க வேண்டும்.

* தம்பட்டி முருங்கை

வழக்கமாக நாம் பயன்படுத்தும் முருங்கையைப் போல  உணவுப்பண்டங்களில் சுவை மற்றும் நறுமணத்தைக் கூட்டுகிற குணம் மட்டும் இதற்கு  இல்லை. ஆனால், குறுமர வகையைச் சேர்ந்த இந்த தம்பட்டி முருங்கைக்கு விந்தணுக்களை உற்பத்தி செய்தல் உட்பட முருங்கையின் மற்ற மருத்துவ குணங்கள் கட்டாயம் உண்டு.

* அம்மான் பச்சரிசி

இதனுடைய மருத்துவ குணம் நாம் அனைவரும் நன்றாக அறிந்த ஒன்றுதான். கீழாநெல்லியைப் போலவே மஞ்சள் காமாலைக்கு ஏற்ற மருந்து  இதுவாகும். இதன் இலையை அரைத்து, சுத்தமான பசுந்தயிருடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர, நாள்பட்ட மஞ்சள் காமாலையும் விரைவில் குணமாகும்.


* வெற்றிலை

இதன் சாறு இளம் தாய்மார்களுக்கு ஏற்படும் சோர்வைப் போக்கி, சுறுசுறுப்பு தரும். ஜீரண சக்தியைத் தருவதோடு வாய் துர்நாற்றத்தையும் போக்கும். வல்லாரைக்கு அடுத்தபடியாக, நினைவாற்றலைத் தருவதில் சிறந்த மூலிகையாக திகழ்கிறது. உடலில் இருக்கும் தேவையற்ற சதையைக் குறைக்கும்.

தொகுப்பு: விஜயகுமார்

படங்கள்: ஜி.சிவக்குமார்


Tags : It is capable of removing mucus from the lungs and bronchi.
× RELATED தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில...