உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுமதியற்ற கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே சீல் வைக்கப்படுகிறது; தமிழக அரசு

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Semi Critical மற்றும் Normal பகுதிகளில் கேட்கப்படும் ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருவதாகவும், அனுமதியற்ற கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே சீல் வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சியதால், நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் சென்றது. இதனால், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள 471 அபாயகரமான பிர்காவில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதே நேரத்தில் குடிநீர் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் பெற்று எடுத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், தமிழக அரசு சார்பில் குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி தர மறுத்து விட்டது. இதை தொடர்ந்து குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில், நேற்று உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் தமிழக அரசு சார்பில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் நேற்று மாலை 6 மணி முதல் உற்பத்தியை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, தினமும் சென்னையில் 5 லட்சம் குடிநீர் கேன் உட்பட மாநிலம் முழுவதும் 20 லட்சம் குடிநீர் கேன்கள் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே உரிமம் பெறாத 300 கேன் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விழுப்புரம், கடலூர், வாணியம்பாடி, திருச்சி மாவட்டங்களில் சட்டவிரோத குடிநீர் ஆலைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இதற்கு தமிழக அரசு புதிய விளக்கம் அளித்துள்ளது. கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், அனுமதியற்ற கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே சீல் வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: