கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில் மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவ வாய்ப்பு: கண்காணிப்பை அதிகரிக்குமா வனத்துறை

போடி: போடி அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொளுத்தும் வெயிலால் காட்டுத் தீ பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வனத்துறையினர் தங்களது கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அகமலையில் தொடங்கி இலங்காவரிசை, ஊரடி, ஊத்துகாடு, உரல்மெத்து, கொட்டகுடி, குரங்கணி முட்டம், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை, முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், போடிமெட்டு என தேக்கடி வரை பரந்துவிரிந்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் மாசி மாதம் முடிவடையும். ஆனால், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

இந்நிலையில் குரங்கணி, கொட்டகுடி, கொழுக்குமலை ஆகிய மலைப் பகுதிகளில் கோரைப்புற்கள் 6 அடி முதல் 7 அடி உயரமாக வளர்ந்துள்ளது. கடும் வெயிலில் கோரைப்புற்கள் காய்ந்துள்ளன. சில சமயங்களில் சமூக விரோதிகள் வைக்கும் தீயால் மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவும் அபாயம் உள்ளது. கடந்த வாரத்தில் கொட்டகுடி, குரங்கணி, ராசிங்கபுரம் மேற்குப்பகுதி சாக்கலூத்து ெமட்டு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதேபோல, முந்தல் சாலையில் துவங்கும் குரங்கணி மலைச்சாலையில் இருபுறங்களிலும் கோரைப்புற்கள் வளர்ந்து நிற்கின்றன. குரங்கனி கொட்டகுடி மேற்குமலைப் பகுதி முழுவதும் காய்ந்துள்ளது. எனவே, வனப்பகுதியில் காட்டுத் தீ பரவாமல் இருக்க, கண்காணிப்பு பணியை வனத்துறை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: