கூ....குச்சு..குச்சு..குநச்சு... நெல்லை மாகராட்சியில் ரயில் போல் மாறிய மாதிரி ஆரம்பப்பள்ளி: மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளால் பெற்றோர் மகிழ்ச்சி

நெல்லை: தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஜொலிக்கிறது நெல்லை மாநகராட்சியிலுள்ள குறிச்சி மாதிரி ஆரம்ப பள்ளிக்கூடம். இங்கு கராத்தே, சிலம்பம், யோகா போன்ற பல்வேறு சிறப்பு கலைகளும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ெநல்லை மாநகர பகுதியில் 20க்கும் மேற்பட்ட மாநகர ஆரம்ப பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளே அதிகம் படித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆரம்ப பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அரசின் நடவடிக்கையால் பள்ளி வரும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு, சிறப்பு சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஓரளவு அதிகரித்துள்ளது.

இதிலும் ஒருபடி மேல் சென்று நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இப்பள்ளியில் தற்போது 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இப்பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் தேவைப்படுகிறது. ஆனால் பள்ளியில் 2 ஆசிரியர்களே உள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை போல் பிரத்யேக சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு பாடங்களை தவிர உடற்பயிற்சி, சிலம்பம், யோகா, கராத்தே, ஓவியம், இசை, புத்தகம் வாசிப்பு திறனை வளர்க்க பயிற்சி, ஆங்கிலம் பேச்சு பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பள்ளி பாடநேரம் முடிந்து மாலையில் இப்பயிற்சிகள் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

இங்கு நல்ல காற்றோட்டமான வசதி, வகுப்பறைகள் காணப்படுகின்றன. தற்போது பள்ளியின் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு விரும்பி வரும் வகையில் ரயில் பெட்டிகள் போன்று வகுப்பறைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளன. முதல் வகுப்பறை ரயில் இன்ஜின் போன்ற தோற்றத்திலும், அடுத்தடுத்த வகுப்பறைகள் ரயில் பெட்டிகள் போன்ற வடிவமைப்பிலும் வர்ணம் தீட்டப்பட்டு பிளாட்பாரத்தில் ரயில் நிற்பது போலவும் மாணவ, மாணவிகள் அதில் ஏறி பயணிப்பது போலவும் உள்ளது. வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் நுழையும் போது ரயில் பெட்டி வாசலில் கைப்பிடி கம்பியை பிடித்து ரயிலில் ஏறி பயணிப்பது போன்ற மனநிலையில் மாணவர்கள் வகுப்பறைக்குள் வரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உற்சாகத்துடன் ரயிலில் பயணிப்பது போன்ற மகிழ்ச்சியாக வந்து செல்கின்றனர். மேலும் பள்ளியின் முன்பக்க காம்பவுண்ட் சுவர் கூட அரண்மனை கோட்டை சுவர் போன்ற தோற்றத்தில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் தவிர்த்தல், பொது இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும். குழாய்களில் தண்ணீரை வாய் வைத்து குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதும் காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: