நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாய் பாலத்தில் இணைப்பு சாலை பணி தீவிரம்

நெல்லை:  சேரன்மகாதேவி வெள்ளநீர் கால்வாய் பாலத்தில், தினகரன் செய்தி எதிரொலியாக இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேரன்மகாதேவி -களக்காடு சாலையில் தனியார் பாலிடெக்னிக் அருகே வெள்ளநீர் கால்வாய் கடந்து செல்கிறது. இக்கால்வாயை கடப்பதற்காக சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. இக்கால்வாயை கடந்து செல்ல இதுநாள் வரை வாகன ஓட்டிகள் அருகிலிருந்த ஆபத்தான சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சர்வீஸ் சாலையானது ஆபத்தான வளைவுகளை கொண்டிருந்ததால் பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

இதையடுத்து புதிய பாலம் கட்டும் பணிகள், தீவரப்படுத்தப்பட்டு கடந்த ஜூலை மாதம் பணிகள் நிறைவடைந்தன. தொடர்ந்து ஆகஸ்ட்டில் புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கியது. பாலம் பயன்பாட்டிற்கு வந்து 7 மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை பாலத்தையும், சாலையையும் இணைக்க இணைப்பு சாலை போடப்படாமல் இருந்தது. இதுகுறித்து கடந்த பிப்.21ல் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், தற்போது அப்பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி முதல் மலைக்கோவில் ஆர்ச் வரை இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தினகரன் செய்தி எதிரொலியாக ரவுண்டானா அருகே புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தின் திறப்பு விழா பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: