பட்டிவீரன்பட்டி பகுதியில் பூக்க துவங்கியது பெரு நெல்லிக்காய்: விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பகுதியில் மருத்துவ குணமிக்க பெரு நெல்லிக்காய் மரங்கள் பூக்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, சித்தையன்கோட்டை, போடிகாமன்வாடி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, ஒட்டுப்பட்டி, சுந்தரராஜபுரம், நெல்லூர்,

தாண்டிக்குடி மலை அடிவார கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மருத்துவ குணம் மிகுந்த பெரு நெல்லிக்காய்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.வறட்சியை தாங்கி வளரும் தன்மை, குறைவான தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவு குறைவு, நிறைவான லாபம் போன்ற காரணங்களால் இப்பகுதி விவசாயிகள் நெல்லிக்காயை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த பெரு நெல்லிக்காய்கள் ஜுஸ் தயாரிப்பதற்கும், ஆயுர்வேதம், யுனானி மருத்துவத்திலும், அழக சாதன பொருட்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய், நெல்லிப்பாக்கு, வடகம் போன்றவை தயாரிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனை சாப்பிட அதிகளவு வாங்கி செல்கின்றனர். இந்த நெல்லிக்காயில் என்.ஏ 7, கிருஷ்ணா, காஞ்சனா, சக்கையா, என்.ஏ 10, ஏந்தல் கோல்டு போன்ற 6 வகைகள் உள்ளன. கன்றுகள் நடப்பட்ட 3 ஆண்டுகளில் காய்க்க துவங்கும். ஒரு மரத்திற்கு ஆண்டிற்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை காய்கள் காய்க்கும். தற்போது பெரு நெல்லிக்காய் மரங்களில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பெரு நெல்லிக்காய்கள் வருடத்திற்கு 2 முறை காய்க்கும். தற்போது ஜனவரி,பிப்ரவரி மாதத்தில் பூ பூத்து மே மாதம் காய் காய்க்க தொடங்கும். தொடர்ந்து டிசம்பர் வரை வரத்து இருக்கும். டிசம்பர் மாதம் காய் காய்க்கும் பருவம் முடிந்தவுடன் இலை அனைத்து உதிர்ந்துவிடும்.

அதன்பின்பு டிசம்பர், ஜனவரி ஆகிய 2 மாதங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கூடாது. ஏனெனில் பூக்கள் தண்ணீர் விட்டால் உதிர்ந்துவிடும். தற்போது பூக்கள் மரங்களில் பூத்துள்ளதால் பிப்ரவரி 15ம் தேதி முதல் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். பெரு நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்பு, சுண்ணாம்பு, பாஸ்டிஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வணிகம், தொழில் ரீதியாக இதன் தேவை அதிகரித்து வருவதால் நிறைவான லாபம் கிடைக்கிறது. தற்போது வறட்சி நிலவுவதால் ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரை சொட்டுநீர்ப்பாசனம் மூலம் பாய்ச்சி வருகிறோம்’ என்றார்.

Related Stories: