அருப்புக்கோட்டையில் டிவைடர்களால் ஆபத்து: வாகன ஓட்டிகள் புகார்

அருப்புக்கோட்டை:  அருப்புக்கோட்டை   மதுரை ரோட்டில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ள டிவைடரால் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். அருப்புக்கோட்டை பாலையம்பட்டி நான்கு வழிச்சாலை இணைக்கும் பகுதியில் இருந்து  பாலையம்பட்டி, புதிய பஸ்நிலையம், வாலசுப்பிரமணியர் கோயில் வரையு–்ம்,  பந்தல்குடி ரோடு எம்எஸ் கார்னரில் இருந்து ராமசாமிபுரம் நான்குவழிச்சாலை வரை  8 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி  நடந்து வருகிறது.  முதற்கட்டமாக பாலையம்பட்டியிலிருந்து புதிய பஸ்நிலையம் வரை சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது.  இந்த சாலையின் நடுவே 4 அடி உயரம் உள்ள தடுப்புச்சுவர் போன்ற டிவைடர் கட்டப்பட்டு வருகிறது.  போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும், எதிர் எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காகவும் இந்த டிவைடர் அமைக்கப்படுகிறது.

 ஆனால், பாலையம்பட்டியிலிருந்து சிஎஸ்ஐ சர்ச் வரை உள்ள ஒவ்வொரு தெருவிற்கும் இடையில் இடைவெளி விட்டு டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் திடீரென தெருவிலிருந்து இடைவெளியில் நுழையும் வாகனம் எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  இந்த டிவைடர் அமைத்ததிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட டூவீலர் விபத்துக்கள் நடந்து உள்ளது. குறுகலான இந்த ரோட்டில் டிவைடர் அமைத்திருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. இந்த பகுதியில் இருக்கும் வங்கிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு செல்ல சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஒருபுறம் நடுவில் டிவைடர், ஒருபுறம் சாலை ஓரத்தில் டூவீலர் வாகனங்களை நிறுத்துவதால் கனரக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றன.

விருதுநகர், மதுரை போன்ற நகரங்களில் டிவைடர் இடைவெளி விட்டு இடைவெளி அமைக்கப்படவில்லை. எனவே, இடைவெளி இல்லாமல் டிவைடரை அமைத்தால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் கூறுகையில்,`` இப்பிரச்னை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.  விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் முன் டிவைடரை முழுமையாக அமைக்கவும், அகலமாக சாலை உள்ள இடத்தில் டிவைடர் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் சாலையின் இருபுறமும் பத்தரை மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கும் பணி நடப்பதால் இதற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் தானாகவே முன்வந்து ஒரு வார காலத்திற்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தெரிவித்தும் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: