மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் நடக்க முடியாத நோயாளிகளுக்கான பேட்டரி கார்கள் வீணாகும் அவலம்

* அரசு பணம் பல லட்சம் பாழானது

* டீனை வற்புறுத்தி வாங்க வைத்ததாக குற்றச்சாட்டு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும், நடக்க முடியாத நோயாளிகளுக் காக வாங்கப்பட்ட 2 பேட்டரி கார்கள் துருபிடித்து வீணாகி கொண்டிருக்கின்றன. இதனால் அரசு பணமும் பல லட்சம் வீணாகி வருகிறது. மதுரை அரசு மருத்துமனைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிந்தோர் என, பல்வேறு சிகிச்சைகளுக்கு வரும் இவர்கள் மருத்துவமனைக்குள் பல வார்டுகளுக்கு செல்லவேண்டி நிலை உள்ளது. இவர்களில் பலர் நடக்க முடியாத நிலையில் வருகின்றனர்.  அரசு மருத்துவமனையில், போதுமான அளவுக்கு வீல்ச்சேர், ஸ்ட்ரெச்சர் இல்லாமை,  பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நடக்க முடியாத நிலையில் வருபவர்கள் மற்றும் முதியோர்கள் பல்வேறு பிரிவுகளுக்கு செல்வதில் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இவர்களின் கஷ்டத்தை போக்குவதற்காக, மருத்துவமனைக்கு பேட்டரி கார்கள் வாங்க வேண்டும் என, சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த ஆலோசனையை, அப்போதைய டீன் ரேவதிகயிலைராஜன் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதையும் மீறி, ரூ.14 லட்சம் மதிப்பில், இரு பேட்டரி கார்கள் இம்மருத்துவமனைக்கு வாங்கப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு நடந்த மருத்துவமனை பவள விழாவில் வழங்கப்பட்டன.  இந்த பேட்டரி கார்களை மருத்துவமனைக்குள் ஓட்டிப்பார்த்த டிரைவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். காரணம் மருத்துவமனை வராண்டாவிற்குள் கார்களை திருப்ப  முடியவில்லை. பின்பக்கமாக வந்தும் திருப்ப முடியவில்லை. இதையடுத்து ஓரிரு நாட்களில் இந்த கார்களை, கார் கம்பெனிக்கு திரும்ப அனுப்ப முயன்றபோது, கார் கம்பெனி வாங்க மாட்டோம் என அறிவித்துவிட்டது. இதையடுத்து இரு பேட்டரி கார்களும், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. பல லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட கார்கள், மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து காலாவதியாகி வீணாகிக் கொண்டிருந்தது.

 இந்நிலையில், காரின் நீளத்தை குறைத்து மீண்டும் பயன்படுத்தலாம் என யாரே மீண்டும் ஆலோசனை கூற, மருத்துவமனை நிர்வாகம் தலை ஆட்டியது. உடனே பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களின் அறிவுரையின் பேரில், மருத்துவமனை வராண்டாவில் திருப்பும் வகையில், இரு பேட்டரி கார்களின் நீளம் குறைக்கப்பட்டது. இதற்கும் சில லட்சங்கள் செலவானது. ஆனால், இதன்பின்னும் கார்களை மருத்துவமனைக்குள் இயக்க முடியவில்லை. இந்த நீளக்குறைப்பையும் முறையாக செய்யாததால், மீண்டும் கார்களை மருத்துவமனைக்குள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த இரு கார்களும் கண்டமாக்கப்பட்டுவிட்டது. இதனால் அரசுக்கு ரூ.20 லட்சம் வரை வீணாகிவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

 * மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, ``டீன் ரேவதிகயிலைராஜன் இருந்தபோது, இந்த பேட்டரி கார்களை நிராகரித்தும், அப்போதைக்கு வழங்கப்பட்டு, இரு கார்களும் பயன்படுத்த முடியாமல் ஒரு வருடம் கிடந்தது. பிறகு நீளத்தை குறைப்பதாக கூறி, அதையும் தவறாக செய்து, தற்போது இந்த இரு கார்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த கார் விவகாரத்தில், பல லட்சம் அரசு பணம் வீணாக்கப்பட்டுள்ளது. இதுபோல இனி அரசு பணம் வீணாகக் கூடாது’’ என்றார்.

* நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது,  ``கார் வாங்க ஆலோசனை கூறியது, பின்னர் நீளத்தை குறைக்க ஆலோசனை கூறியது. அந்த ஆலோசனையை முறையாக செய்யாமல்,  ஏனோ, தானோ என செய்து இரு கார்களையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். இந்த கார்களை வைத்து சிலர் லாபமடைந்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியவர்கள் குறித்து விசாரித்து, இழப்பீடு தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: