×

குழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா? சோனியாவுக்கு பாஜ பதிலடி

புதுடெல்லி: ‘குழப்பத்தை ஏற்படுத்தி, திசை திருப்பும் நீங்கள் எங்களுக்கு ராஜதர்மத்தை போதிக்காதீர்கள்,’ என சோனியா காந்திக்கு பாஜ பதிலடி கொடுத்துள்ளது. டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்துமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா தலைமையில் அக்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர். அப்போது, அனைத்து மக்களின் நம்பிக்கையை பாதுகாத்து, ராஜதர்மத்தை மத்திய அரசுக்கு நினைவூட்ட வேண்டுமென அவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.  இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கலவரம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே அதை கட்டுப்படுத்த அமித்ஷா தீவிர முயற்சிகள் எடுத்துள்ளார். சில பாஜ அமைச்சர்கள் கூறிய சர்ச்சை கருத்துக்களை எங்கள் கட்சி ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எனவே, ராஜதர்மத்தை பற்றி சோனியா எங்களுக்கு போதிக்க வேண்டாம். குழப்புவதும் திசை திருப்புவதும்தான் உங்களின் ஒட்டுமொத்த சாதனையே.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். காங்கிரஸ் ஏதாவது செய்தால் அது நல்லது. அதையே நாங்கள் செய்தால், அவர்கள் மக்களை தூண்டி விடுகிறார்கள். இது என்ன மாதிரியான ராஜ தர்மம்? பேரணியின் போது ‘முடிவு கட்ட போராடுங்கள்’ என சோனியா பேசுகிறார். இது மட்டும் அரசியலமைப்பை மீறும் பேச்சு கிடையாதா? வாக்கு வங்கி அரசியலுக்காக எந்தளவுக்கும் காங்கிரஸ் தரம் தாழ்ந்து போகலாம். நாட்டின் நல்லிணக்கத்தையும், அமைதியையும் கட்டிக்காக்க பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.  அக்கட்சியை பொறுத்த வரை, ஒரு குடும்பத்திற்கு பிறகுதான் நாடே.  இவ்வாறு அவர் கூறினார்.

‘பிரித்தாளுவதுதான் உங்கள் ராஜதர்மம்’
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்துக்கு பதில் கூறும் வகையில் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘‘சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் இந்திரா, ராஜிவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் ராஜதர்மம். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள். பாரபட்சம் காட்டுகிறீர்கள். பிரித்தாளும் மனநிலை கொண்டவர்கள் நீங்கள்’’ என கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயக நாட்டில் அரசின் தவறான முடிவை எதிர்த்து அமைதியான முறையில் கருத்தை வெளிப்படுத்துவது தவறு என்றால் எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். பேச்சு சுதந்திரம் இல்லாத நாட்டில் நாம் வாழ்கிறோமா என்பதை எண்ணும் போது வெட்கமாக இருக்கிறது,’’ என்றார்.

அமெரிக்கா அட்வைஸ்
டெல்லி கலவரம் தொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாஷிங்டனில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி கலவரத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு மதிப்பளித்து, மக்களுக்கு அதிகாரிகள் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். மத சுதந்திரம் தொடர்பாக விவகாரங்களில் தொடர்ந்து இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்,’’ என்றார்.

பதில் கூறாமல் நழுவிய நட்டா
இமாச்சல பிரதேசம், சிம்லா சென்றுள்ள பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, அங்கு அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான வீர்பத்ர சிங் வீட்டிற்கு நேற்று சென்றார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வீர்பத்ர சிங் வீடு திரும்பி உள்ளார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்த பின் வெளியே வந்த ஜேபி நட்டா, ‘‘வீர்பத்ர சிங் மருத்துவமனையில் இருந்த போது அவரை சந்திக்க முடியவில்லை. அதனால் இப்போது நேரில் வந்து நலம் விசாரித்தேன்’’ என்றார். அப்போது ஒரு நிருபர், டெல்லி கலவரம் தொடர்பாக கருத்து கேட்டார். அதற்கு நட்டா, எதுவும் பதில் கூறாமல் அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Tags : Sonia ,Baja , Sonia, BJP
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்