சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: வன்முறையை தூண்டும் விதமாக பேசியது தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வடகிழக்கு டெல்லியில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.  ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாதுல்லா கான், ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி மற்றும் அக்கட்சி முன்னாள் எம்எல்ஏ வாரிஸ் பதான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவதுடன், வன்முறை தூண்டும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மற்றொரு மனுவில் தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டுமெனவும், வன்முறையை தூண்டிய அரசியல் கட்சித் தலைவர்களை கைது செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி மாநில அரசு மற்றும் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: