தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் நடந்த பிரேத பரிசோதனை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை கூடத்தில் 4 மருத்துவர்கள், டெக்னீசியன், 2 துப்புரவு பணியாளர்கள், உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். டாக்டர்கள் ஆலோசனைப்படி மருத்துவ பணியாளர்கள், இறந்தவரின் உடலை வெட்டி உடல் உறுப்புகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்புவார்கள். கொலை செய்யப்பட்டவரின் உடலில் எத்தனை இடங்களில் காயங்கள் உள்ளன, அரிவாளால் வெட்டப்பட்டாரா?, கத்தியால் குத்தப்பட்டாரா என்பதை பிரேத பரிசோதனை மூலம் கண்டுப்பிடிக்கப்படும். அந்த உடல்கூறு அறிக்கையை டாக்டர் சொல்ல, சொல்ல இன்னொரு ஊழியர் அறிக்கையாக எழுதுவார்கள். இது தான் வழக்கமாக உள்ள நடைமுறையாகும்.

ஆனால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இறந்தவரின் உடலை டாக்டர்கள் அல்லாத மருத்துவ பணியாளர்கள் சிலர், பிரேத  பரிசோதனை செய்வது போன்ற வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரேத பரிசோதனை கூடத்தில், டாக்டர் இருந்தாலும் சடலத்தை தொடுவதில்லை என்றும், மருத்துவ பணியாளர்கள் தான் சடலத்தை அறுத்து உடற்கூறு பரிசோதனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஸ்ரீனிவாசராஜ் இன்று(29ம் தேதி) பணி ஓய்வு பெற உள்ளார். இந்தநிலையில், டாக்டர் இல்லாமல் பிரேத  பரிசோதனை செய்த வீடியோ வேகமாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: