டெல்லியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் ஜனாதிபதி கோவிந்துக்கு கடிதம்

புதுடெல்லி: டெல்லியில் கலவரம் வெடித்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன. டெல்லி கலவரம் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேற்று முன்தினம் சந்தித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆர்ஜேடி, எல்ஜேடி, திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சி தலைவர்களும் ஜனாதிபதியை சந்தித்து பேச நேரம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நேற்று அவர்கள் கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளனர். அதில், ‘வடகிழக்கு டெல்லியில் உடனடியாக அமைதி ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, உங்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் அதிகாரிகளுக்கு  உத்தரவிட வேண்டும்.  விரைவாக இயல்புநிலை திரும்புவதை உறுதி செய்வதோடு, கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசியவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தங்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க நேரம் ஒதுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: