சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க ஏப்ரல் முதல் பிஎஸ்-6 பெட்ரோல் விற்பனை: ஐஓசி நிர்வாக இயக்குனர் தகவல்

பெங்களூரு: சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில்  நாடு  முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல் பங்க்குகளில் பி.எஸ்-6  பெட்ரோல் வினியோகம் செய்யப்படும் என இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன  நிர்வாக இயக்குனரும், கர்நாடக மாநில முதன்மை அதிகாரியுமான டி.என்.பிரமோத்  தெரிவித்தார். பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி  அளிக்கையில் கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்கும்  நிறுவனங்களில் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் ஒன்று. இந்திய  வளர்ச்சி மற்றும் சுற்றுப்புற சூழலை  பாதுகாப்பதில் இந்நிறுவனம் பல்வேறு  வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு கட்டமாக தற்போது  பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்து வரும் பி.எஸ்-4 பெட்ரோலுக்கு பதிலாக  பி.எஸ்-6 பெட்ரோல் விற்பனை செய்யப்படும். ரூ.70 ஆயிரம் ேகாடி செலவில் நாடு  முழுவதும் உள்ள பங்க்குகளில் ஏப்ரல் மாதம் முதல் பி.எஸ்-6 பெட்ரோல் விற்பனை  செய்ய இருப்பதால் பங்க்குகளின் தரம் உயர்த்தப்படும்.

கர்நாடகாவில்  ஏற்கனவே, 4 ஆயிரத்திற்கும் அதிகமான பங்க்குகளில் பி.எஸ்-6 பெட்ரோல் விற்பனை  செய்யப்படுகிறது. சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் உலகிலேயே  முதன் முறையாக இந்தியாவில் பி.எஸ்-6 பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால்,  பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஹுப்பள்ளியில்  முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றபோது, சித்ரதுர்காவில் இண்டியன் ஆயில்  கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மையத்தை நிறுவ மத்திய அரசுடன் ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது என்றார்.

Related Stories: