ஏற்றுமதியாளரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: அஸ்தனாவுக்கு எதிராக வலுவான ஆதாரம்: டெல்லி நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனாவிற்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சிபிஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா பதவி வகித்தபோது, சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோசியை ஒரு வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர்  புகார் செய்தார்.  இந்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு அஸ்தனாவும், டிஎஸ்பி தேவந்தர் குமாரும் சிபிஐ.யால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 12ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ.யின் விசாரணைஅதிருப்தி தருவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்ஜீவ் அகர்வால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் முன்னாள் விசாரணை அதிகாரியான குமார் பாசி ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலத்தில், “தற்போதுள்ள விசாரணை அதிகாரி சதீஷ் தாகூர், அஸ்தானாவையும் இதர அதிகாரிகளையும் வழக்கில் இருந்து பாதுகாக்க முயற்சிக்கிறார்,” என குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து ராகேஷ் அஸ்தனா லஞ்சம் பெற்றதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக கூறிய நீதிபதி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: