பங்கு முதலீடுகள் பலன் தரவில்லை பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டம்: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. பிஎப் நிறுவனம், தொழிலாளர்களின் பிஎப் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.65 சதவீதம் வட்டி நிர்ணயித்தது. பிஎப் அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தொழிலாளர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும். நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகித நிர்ணயம் தொடர்பாக, அடுத்த மாதம் 5ம் தேதி பிஎப் நிறுவனத்தின் மத்திய வாரிய அறக்கட்டளை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முறை பிஎப் வட்டி குறைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிஎப் நிதி பங்குச்சந்தை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை இல்லாததால், எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் பணத்தில் சுமார் 18 லட்சம் கோடி இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தில் மேற்கொண்ட 4,500 கோடி அடங்கும். இந்த நிறுவனங்கள் இரண்டுமே நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளவை. இதில், திவான் ஹவுசிங் நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ள முதல் வங்கி சாரா நிதி நிறுவனம். இந்த பணம் திரும்ப வருமா என்பது சந்தேகம்தான்.  பிஎப் நிறுவனம் தனது முதலீட்டு தொகையில் 85 சதவீதத்தை கடன் சந்தையிலும், 15 சதவீதத்தை பங்குகளில் இடிஎப் பண்டுகள் வாயிலாக  முதலீடு செய்துள்ளது.  கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதிப்படி, பங்குகளில் 74,324 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 14.74 சதவீத லாபம் கிடைத்துள்ளது.

எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை. ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் அரசு தவித்து வரும் நிலையில், பிஎப் வட்டி விகிதத்தையும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது உள்ள பிஎப் வட்டி விகிதமான 8.65 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதம் குறைத்து 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் மத்திய வாரிய அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்றார்.   பெரும்பாலான தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வுபெறும் காலத்தில் பிஎப் பணத்தைதான் நம்பியிருக்கின்றனர். வேறு சேமிப்புகள் இல்லாவிட்டாலும், பணி ஓய்வின்போது இதுதான் கைகொடுக்கும். இந்த நிலையில், மேற்கண்ட தகவல் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

* கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதிப்படி, பங்குச்சந்தை திட்டங்களில் பிஎப் பணம் 74,324 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

*  நிதி முறைகேட்டில் சிக்கிய திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனங்களில் மட்டும் 4,500 கோடி பிஎப் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: