திருவிக நகர் மண்டலத்தில் நோய் பரப்பும் மாநகராட்சி கழிவறைகள்: சுகாதாரமற்ற திறந்தவெளியை நாடும் பொதுமக்கள்

பெரம்பூர்: இந்தியாவை  திறந்தவெளி கழிவறைகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டுமென மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக நிதி ஒதுக்கி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முறையான கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல், சென்ைன மாநகராட்சியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் நவீன பொது கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல இடங்களில் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை மட்டும் இன்னும் மாறவில்லை. மாநகராட்சி பொது கழிவறைகளில்  சுகாதார தன்மை இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  தண்ணீர் பிரச்னை, உடைந்த குழாய்கள், கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் பொது கழிவறைகள் துர்நாற்றம் வீசி வருகின்றன.

Advertising
Advertising

இதனால், பொதுமக்கள் திறந்தவெளியை நாடும் நிலை உள்ளது. இந்த கழிவறைகளை பராமரிக்க மாநகராட்சியில் தனியாக ஆட்கள் இருந்தாலும், அவரகள் வசூல் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளனர்.  அந்தந்த வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் நியமித்த ஆட்கள்தான் மாநகராட்சி கழிவறை வெளியே அமர்ந்து சிறுநீர் கழிப்பதற்கு ரூ.5,  குளிப்பதற்கு  ரூ.10 ரூபாய் என வசூல் செய்து வருகின்றனர். ஆனால், கழிவறைகளை முறையாக சுத்தம் செய்து, பராமரிப்பதில்லை.   சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலம், 70வது வார்டுக்கு உட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் கண்ணபிரான் கோயில் தெரு சந்திப்பில் உள்ள மாநகராட்சி கழிவறைகள்  சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. இந்த கழிவறைகளில் கதவுகள் பெயர்க்கப்பட்டு தனியாக கழட்டி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழே உள்ள தரைகள் உடைக்கப்பட்டு அதில் கழிவுநீரும் சிறுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.  பெண்கள் கழிவறை கதவுகள் சரிவர இல்லாததால் இந்த கழிவறையை பெண்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், இந்த கழிவறைகளில் கட்டணம் வசூல் வேட்டை மட்டும் நடைபெறுகிறது. இதனால், பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்தவெளியை நாடும் நிலை உள்ளது.

இதேபோல், மண்டலம் முழுவதும் பல இடங்களில் பொது கழிவறைகளின் நிலை மிக மோசமாக உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பொது கழிவறையை மக்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை.  ஏனென்றால் கழிவறைக்குள் சென்றாலே  துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவறையை பயன்படுத்தும் பலருக்கு நோய் தொற்று ஏற்படுவதால், நாங்கள் இதை பயன் படுத்துவதே இல்லை. அருகில் உள்ள விளையாட்டு   திடலுக்கு சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளனர்,’’ என்றனர்.

Related Stories: