புழல் பாலாஜி நகர், ஆதம்பாக்கம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் பாலாஜி நகர் காந்தி  பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த படிக்கட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர்.  சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் பாலாஜி நகர் காந்தி பிரதான சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் சிலர் கடைகள் கட்டி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி புழல் 22வது வார்டு அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வார்டு இளநிலை பொறியாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்து சாலையை ஆய்வு செய்தனர். அப்போது சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இயந்திரங்கள் மூலம் படிக்கட்டுகளை இடித்து அகற்றினர். மேலும் இந்த பகுதி சாலைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.   

Advertising
Advertising

ஆலந்தூர்: ஆதம்பாக்கம், நியூ காலனி பிரதான சாலையில் கடைகளை வைத்திருப்பவர்கள், சாலையை ஆக்கிரமித்து முகப்புகள், விளம்பர போர்டுகள் மற்றும் பொருட்களை வைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன்பேரில், ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் முருகன்,  மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஹார்ட்டின் ரொசாரியா,  வார்டு உதவி பொறியாளர் சேதுராமன் ஆகியோர் நேற்று, சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம், சாலையை  ஆக்கிரமித்திருந்த 40க்கும் மேற்பட்ட கடைகளின் முகப்பு மற்றும் விளம்பர போர்டுகளை அகற்றினர்.

Related Stories: