சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 40 தடங்களில் ஏசி பஸ் சேவை நிறுத்தம்?பயணிகள் எண்ணிக்கை குறைவால் நடவடிக்கை: ஓட்டுனர், நடத்துனர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சென்னை: குறைவான பயணிகளே பயன்படுத்துவதால், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 40க்கும் மேற்பட்ட ஏசி பஸ் சேவைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும்  நிறுத்தி வைப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில் இவற்றுக்கான வரவேற்பு அதிகமாகவுள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.  சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த பஸ்களில் பயணிகள் குறைவாக பயன்படுத்துவதாக காரணம் காட்டி ஏசி பஸ் சேவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த பஸ்களில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சமீபத்தில் ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றக்கூடிவர்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிறுவனங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதனால் அப்போது ஏசி பஸ்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. இதனால் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தினங்களில் ஏசி பஸ்களில் இயக்கத்தை நிறுத்தி வைக்கின்றனர்.  அன்றைய தினம் ஏசி பஸ்களில் பணியாற்றக்கூடிய ஓட்டுனர், நடத்துனர்கள் ேவலையில்லாமல் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுகிறது. முன்பு ஏசி பஸ்களில் பணியாற்றுவது என்றால் ஓட்டுனர், நடத்துனர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால் அவர்கள் அச்சமடையும் சூழல் உள்ளது.

இவ்வாறு பஸ்களை நிறுத்தி வைப்பதால் நிர்வாகத்திற்கு தேவையில்லான இழப்பு ஏற்படும். எனவே விடுமுறை தினங்களில் குறிப்பிட்ட சிலஇடங்களுக்கு பொதுமக்கள் அதிகம் செல்வார்கள். அங்கு ஏசிபஸ்களை இயக்கலாம். அதாவது மகாபலிபுரம், மெரினா, உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலாப்பகுதிகளுக்கும், கோவில் அதிகம் உள்ள இடங்களுக்கும் இயக்க வேண்டும்.  அப்போது பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். எனவே விடுமுறை தினங்களில் பஸ்கள் எந்த வழித்தடத்தில் இயக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த வழிதடங்களில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் குறைக்கப்படும். இதற்கு அன்று பயணிகள் குறைவாக பயணிப்பார்கள் என்பதே காரணம். அந்தவகையில் தான் ஏசிபஸ்களின் இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏசி பஸ்கள், மற்ற பஸ்களை விட பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காகவும் நிறுத்தி வைக்கப்பட்டு சர்வீஸ் செய்யப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் இயக்கம் குறித்து தனியாக கால அட்டவணை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி பஸ்கள் இயக்கப்படுகின்றன’ என்றனர்.

Related Stories: