×

நண்பரை அடித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: குடிபோதையில் நண்பரை அடித்து கொன்ற வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றனம் தீர்ப்பளித்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (25). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தார். இவரது நண்பர், ஒரகடம் அடுத்த வட்டம்பாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் (30). கடந்த 11.11.2012 அன்று இரவு தீனதயாளன், மது அருந்துவதற்காக வேணுகோபாலை பனப்பாக்கம் அழைத்து சென்றுள்ளார். அங்கு தோப்பில் இருவரும் மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த தீனதயாளன், அருகில் இருந்த கருங்கல்லால் வேணுகோபால் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின்படி ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் காஞ்சிபுரம் விரைவு நீதிமன்ற நீதிபதி கயல்விழி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தீனதயாளனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 45 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தீனதயாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் இளவரசு ஆஜரானார்.

Tags : Murder, life imprisonment, Kanchipuram, court
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...