கேட்பாரற்று நின்ற லாரியில் 20 டன் செம்மரக்கட்டை பறிமுதல்

புழல்: செங்குன்றம் அருகே உள்ள தனியார் நிலத்தில் கேட்பாரற்று நின்ற வடமாநில லாரியில் இருந்து 20 டன் செம்மரக்கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன், மாதவரம் நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே உள்ள தனியார் நிலத்தில் கடந்த சில நாட்களாக ஒரு வடமாநில லாரி கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதில் சந்தேகம் அடைந்த நிலத்தின் உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த லாரியை சோதனை செய்தனர். அதில் தார்பாய் போட்டு மூடியிருந்த பொருட்களை அகற்றி பார்த்தபோது உள்ளே 20 டன் செம்மரக்கட்டையை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரியை செம்மரக்கட்டைகளுடன் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கட்டைகளுடன் இங்கு லாரியை நிறுத்தியது ஏன்? கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார், யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், செம்மரக்கட்டைகளுடன் லாரியை திருவள்ளூர் அடுத்த சீத்தஞ்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: