கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி நடக்கும் சூளேரிக்காட்டுக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரப்படும்: குடிநீர் வாரிய செயல் இயக்குனர் பேச்சு

சென்னை: நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்எல்டி உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான சூளேரிக்காட்டுக்குப்பம் கிராம மக்களுடனான வாழ்வாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று சூளேரிக்காட்டுக்குப்பம் நடைபெற்றது.  சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் டாக்டர் த.பிரபுசங்கர் பங்கேற்று கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள், கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தகாரர்கள் உள்பட சூளேரிக்காட்டுக்குப்பம் சார்ந்த 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவாதித்தனர். பின்னர் கிராம மக்கள் மத்தியில் செயல் இயக்குநர் பிரபுசங்கர் பேசியதாவது: இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும். சூளேரிக்காட்டுக்குப்பம் மீனவ கிராமத்திற்கு இந்த கடல்நீரையே குடிநீராக்கி சுத்தப்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வீட்டுமனை பட்டா அனைத்து வீடுகளுக்கும் வழங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆளவந்தான் டிரஸ்ட் நிலப்பட்டா வழங்க இந்து அறநிலையத்துறை ஆணையரை அணுகி வீட்டுமனை பட்டாக்கள் வழங்க விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும். கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணி  மற்றும் பராமரிப்பு பணிகளில் சூளேரிக்காட்டுக்குப்பம் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீன் பிடிப்பு அல்லாத காலங்களில் மீனவர்களுக்கு மாதம் ₹5,000 நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். சூளேரிக்காட்டுக்குப்பம் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் பள்ளியாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: