மெட்ரோ ரயில்களில் கட்டணமில்லா பொழுதுபோக்கு வசதி

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு கட்டணமில்லா செல்போன் பொழுதுபோக்கு வசதிகளை நேற்று முதல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இளைய தலைமுறை பயணிகளை கவரும் நோக்கில் மெட்ரோ ரயிலில் செல்போனில் கட்டணமில்லா பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. அதன்படி, மெட்ரோ ரயிலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு வசதிகளையும், மின்சார ஸ்கூட்டர் வசதியையும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.  இந்த இலவச பொழுதுபோக்கு வசதி முதல்கட்டமாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து பரங்கிமலை மற்றும் விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை பயணிகள் மெட்ரோ ரயிலில் நுழைந்த பின்னர், தங்களின் கைபேசியில் அதற்கான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதன்மூலம் தமிழ், தெழுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொடர்கதைகள் போன்றவற்றை கட்டணமில்லாமல் பார்க்க முடியும்.  இதேபோல், ரூ.1 கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வகையிலான இ-பைக் சேவையும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 4 நிலையங்களில் இந்த சேவை செயல்பட்டு வருகிறது. மேலும், கூடிய விரைவில் இலவச பொழுதுபோக்கு சேவை விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையில் செல்லும் நீள வழித்தடத்தில் செயல்படுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: