இலங்கை நண்பரை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லண்டன் நண்பரை கொலை செய்த, ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு. இலங்கையை சேர்ந்தவர் கணபதிபிள்ளை துரைசிங்கம். இவர் லண்டனில் வசித்து வந்தார். இந்நிலையில் கணபதி கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை வந்து எழும்பூர் தனியார் ஹோட்டலில் தங்கினார். அப்போது இலியாஸ் என்பவர் கணபதிக்கு நண்பராகியுள்ளார். பின்னர் இலியாஸ் தனது நண்பரான ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் செல்லதுரை என்பவரை கணபதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் இலியாஸ் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் சேர்ந்து கணபதியிடம் உள்ள பணம், பொருட்களை திருட திட்டமிட்டனர். இந்நிலையில் ஜனவரி 24ம் தேதி அதிகாலை கணபதி லண்டன் செல்வதற்காக  ஸ்டீபனுக்கு சொந்தமான ஆட்டோவில் ஏறி, விமான நிலையம் சென்றுள்ளார்.

அப்போது தயாராக இருந்த இலியாஸ் நண்பன் ஸ்டீபன் ஆகியோர் சேர்ந்து கணபதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த, ₹50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் முதல் குற்றவாளியான இலியாஸ், நீண்ட காலமாக தலைமறைவாக உள்ளார். 2வது குற்றவாளியான ஸ்டீபனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.வி.ஆனந்த் முன் நடந்து வந்தது.  இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் நடந்து முடிந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஸ்டீபன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது என்று கூறி தீர்ப்பளித்தார்.

Related Stories: