பெசன்ட்நகர் கடற்கரையில் தூங்கிய நரிக்குறவ பெண் குழந்தை மாயம்

வேளச்சேரி: சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில்  நரிக்குறவ பெற்றோருடன் தூங்கிய 8 மாத பெண் குழந்தை நள்ளிரவில் மாயமானது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கும்பகோணத்தை சேர்ந்தவர் பாட்சா (27). நரிக்குறவர். இவரது மனைவி சினேகா (22). தம்பதிக்கு ராஜேஸ்வரி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் சினேகா தனது குழந்தையுடன் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து உறவினர்களுடன் பலூன் விற்று பிழைப்பு நடத்த சென்னை வந்துள்ளனர்.  நேற்று முன்தினம் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில்  பலூன் வியாபாரம் செய்துவிட்டு அங்கேயே  படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவு கண் விழித்து பார்த்தபோது தாய் அருகில் தூங்கிய 8 மாத குழந்தை மாயமானது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பல இடத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

Advertising
Advertising

இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சினேகா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாராவது கடத்தினார்களா? அல்லது பெற்றோர் தூக்கத்தில் இருந்தபோது குழந்தை தவழ்ந்து எங்காவது சென்றுவிட்டதா? அல்லது கணவன் தேடி வந்து குழந்தையை தூக்கி சென்றாரா? என     அறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: