எளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.காத்தவராயன் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு சொல்லொனாத்  துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக, மாவட்ட பிரதிநிதியாகப் பணியாற்றிய அவர் - தற்போது மாவட்ட துணை செயலாளர். கடைக்கோடி தொண்டனிடமும் கனிவுடன் பழகும் மனித நேயமிக்க பண்பாளர். பேரணாம்பட்டு நகர  தலைவராக பணியாற்றி - மக்கள் மனம் கோணாமல் பல்வேறு சமுதாயப் பணிகளையாற்றி கழகத்திற்கு அந்தப் பகுதியில் நற்பெயர் சம்பாதித்துக் கொடுத்தவர்.

Advertising
Advertising

குடியாத்தம் இடைத்தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று - திமுக சட்டமன்ற உறுப்பினராக அமோக வெற்றி பெற்ற அவர் தொகுதி பிரச்னைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக தொகுத்து வாதாடி அவையில்  இருந்தவர்களை எல்லாம் வியக்க வைத்தவர். அவரது வாதத் திறமையை நேரில் கண்ட நான் - அவரை என்னருகில் அழைத்து பாராட்டியது இன்றும் என் கண் முன் வந்து நிழலாடுகிறது.

காத்தவராயனுக்கு “கழகப் பணியும்” “மக்கள் பணியும்” இரு கண்கள் போன்றது என்பதை நானறிவேன். என்றைக்கும் கலைஞர் மீது நீங்காப்பற்று வைத்திருந்த அவர் - திமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அசைக்க முடியாத தூணாக  குடியாத்தம் பகுதியில் விளங்கியவர். என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்டமன்ற உறுப்பினர்களில் நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. இந்த துயரமிகுந்த தருணத்தில், அவரை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உடன்பிறப்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: