×

சென்னை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்

வேலூர்: குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் நேற்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இன்று நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பங்கேற்கிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.காத்தவராயன்(60). இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் நடந்த குடியாத்தம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் கஸ்பா  மூர்த்தியைவிட 27 ஆயிரத்து 841 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்த காத்தவராயன் கடந்த 4ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதே மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சையில் இருந்து வந்த காத்தவராயனின் உடல்நிலை மோசமாகி நேற்று காலை மரணமடைந்தார். எம்எல்ஏ காத்தவராயனின் இறுதி ஊர்வலம் இன்று அவரது சொந்த ஊரான பேரணாம்பட்டில் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக முன்னணி தலைவர்கள், பிற கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று  திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.இறந்த காத்தவராயனுக்கு திருமணமாகவில்லை. எஸ்எஸ்எல்சி படித்த காத்தவராயன்,
திராவிட இயக்க கொள்கைகளின் மீதான பற்று காரணமாக 1980ல் திமுக அடிப்படை உறுப்பினரானார்.

1984ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர இளைஞரணி அமைப்பாளராகவும், 1987ம் ஆண்டு பேரணாம்பட்டு ஒன்றிய இளைஞரணி  அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 1996ல் மாவட்ட பிரதிநிதியாகவும், 2013ல் வேலூர் மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இதற்கிடையில் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக பொறுப்பேற்றார். குடியாத்தம் தனித்தொகுதியில் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அதிமுக  வேட்பாளரை  27 ஆயிரத்து 841  வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். காத்தவராயன் 9 மாதமே எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.

Tags : Kathavaran ,MLA ,Chennai ,Gudavaram DMK ,hospital , Gudavaram DMK MLA Kathavaran passes away in Chennai hospital
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...