‘அதிமுககாரனுக்கு கல் எறிய தெரியும்’மண்டைய உடைச்சுதான் நான் மந்திரியானேன்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு

வத்திராயிருப்பு: அதிமுககாரனுக்கு கல் எறிய தெரியும். மண்டையை உடைத்துத்தான் மந்திரியாகியுள்ளேன் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் நடந்தது. திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா தலைமை வகித்தார். ஒன்றிய  தலைவர் சிந்து முருகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி மான்ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: நான் சிறுவயதாக இருக்கும்போது யாரையாவது மண்டையை உடைத்து விட்டு வந்தால், எனது தாயார் என்னை வீட்டிற்குள் இருக்குமாறு செய்வார்.

யாராவது வந்து உங்கள் பையன் வந்தானா? என்று கேட்டால் இல்லை என்று  சொல்லிவிடுவார். என் தாய் என்னை பாசத்தோடு வளர்த்தார். நான் தாய்க்கு கட்டுப்பட்டவன். அத்தோடு மண்டை உடைப்பு உள்ளிட்ட 16 கேஸ்களை சந்தித்தவன். இதனால்தான் மந்திரியானேன். 16 கேஸ்களில் ஒரு கேஸ்க்கு கேரளா மற்றும்  எஸ்டேட் சென்று விட்டு 2 ஆண்டுகள் கழித்துத்தான் ஊருக்கு வந்தேன்.அதிமுகவினர் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் அல்ல. எம்ஜிஆரின் கையை பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடுதான் இருப்போம். அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது. அதிமுககாரன், விசில் அடிப்பான்,  சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: