கடந்த 2016ல் ஜெயலலிதா அறிவித்த கடலாடி சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் ரத்து: மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் அறிவிப்பு;ராமநாதபுர மக்கள் அதிர்ச்சி

சாயல்குடி: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2016ம் ஆண்டு அறிவித்த கடலாடி 500 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை ரத்து செய்து, மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால்  ராமநாதபுரம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் 1,500 ஏக்கரில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். சாகுபடிக்கு பயன்படாத சமுதாய மற்றும் பட்டா  நிலங்களில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்டிலும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடலாடியில் 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்னழுத்தப் பூங்கா திட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் என்று  அறிவித்திருந்தார். இதற்காக 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் தங்கமணியும் சட்டப்பேரவையில் அறிவித்தார்.இந்நிலையில் கடலாடி சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தை ரத்து செய்துள்ளதாக, மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் நேற்று திடீரென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ராமநாதபுரம் மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கடலாடியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘கடலாடியில் ஏற்கனவே அமையவிருந்த 4,000 மெகாவாட் அனல்மின்நிலைய திட்டமும் கைவிடப்பட்டது.

 தற்போது சூரிய மின்சக்தி திட்டத்தையும் ரத்து செய்து மத்திய எரிசக்தி துறை  அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்புகளோடு நின்று விடுகின்றன’’ என்று வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான 1,500 ஏக்கர் நிலத்தை கண்டறியும் பணி  முடிவடைந்துள்ளது என்றும், இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் மீண்டும் விண்ணப்பிக்கப்படும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: