திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி இறுதி ஊர்வலம்: 5 கி.மீ தூரம் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி இறுதி ஊர்வலத்தில்  மயானம் வரை 5 கி.மீட்டர் தூரம் மு.க.ஸ்டாலின்  நடந்து சென்று அஞ்சலி செலுத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருவொற்றியூர் கேவிகே குப்பத்தில்  வசித்து வந்த திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி (58),  உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலை அவரது  வீட்டில் காலமானார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து கே.பி.பி.சாமியின்  உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது சகோதரர்கள் கே.பி.சங்கர், கே.பி. இளங்கோ, கே.பி.சொக்கலிங்கம், அவரது மகன் பரசுபிரபாகரன் மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

 இந்நிலையில், நேற்று மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. கே.வி.கே. குப்பத்தில் உள்ள வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் கே.பி.பி.சாமி உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லபட்டது. இதில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வீட்டில் இருந்து திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெரு அருகே உள்ள மயானம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவருடன்  கே.என்.நேரு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், கலாநிதி வீராசாமி, ஆர்.டி.சேகர், கு.க.செல்வம், அரங்கநாதன், கும்மிடிப்பூண்டி வேணு, சமத்துவ மக்கள் கழக தலைவர்  எர்ணாவூர் நாராயணன், திமுக பகுதி செயலாளர் தனியரசு, மாவட்ட, பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், இளைஞர் அணி மகளிர் அணி, மீனவர் அணி மற்றும் தமிழகத்தில் முழுவதும் உள்ள மீனவர் நல சங்கங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,  விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகி சோலையப்பன் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். மயானத்தில் கே.பி.பி.சாமியின் உடலுக்கு அவரது மகன் பரசு பிரபாகரன் இறுதி சடங்கு செய்த பின்னர், உடல் தகனம் செய்யப்பட்டது.

க.அன்பழகனிடம் உடல்நலம் விசாரிப்பு

சென்னை: திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் (97), சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.

அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது எ.வ.வேலு, ஆ.ராசா, கலாநிதி  வீராசாமி, நந்தகுமார், வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர்.

Related Stories: