×

அரசியலில் ரஜினியுடன் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: அரசியலில் ரஜினிகாந்துடன் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.மக்கள்  நீதி மய்யம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அக்கட்சியின்  பொருளாதார திட்ட அறிக்கையை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியது: தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை. பேச்சுவார்த்தையில் எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து கூட்டணி அமையும். ரஜினியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்த  வாய்ப்பு இருக்கிறது. மற்ற முன்னணி கட்சிகள் இருக்கும்போது உங்களால் வர முடியுமா என கேட்கிறீர்கள். நான் சாதாரணமான விஷயங்களை அல்லது சரித்திரத்தில் ஒரு சின்ன இடமாவது கிடைக்கும் என்று நினைக்கக்கூடிய விஷயங்களில்தான் முனைப்புடன்  செயல்பட்டு உள்ளேன்.

நான் பெரிதாக மதிக்கும் எம்ஜிஆர், சிவாஜி போன்றோர் இருந்த திரைத்துறையில், இன்னொருவர் வருவதற்கு இடமே இல்லை. ‘தம்பி நீங்கள் சின்னசின்ன வேஷங்கள் செய்து விட்டு போங்கள்’ என்று தான் சொன்னார்கள். அவர்கள் (எம்ஜிஆர், சிவாஜி) இருக்கும்போது, அவர்கள் ஆசியுடன், அவர்கள் இடத்தை கைப்பற்றினோம். அவர்களின் போட்டியாளர்களாக இல்லை.  அவர்களது ஆசியுடன் இதைச் செய்தோம். அந்த நிலைமை அரசியலிலும் எப்போதும் இருக்கிறது என்று நம்புகிறேன். மற்ற உதாரணங்களை வைத்து நான் தடுமாறியது கிடையாது. என் உதாரணம், நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்.

மக்களவை தேர்தலின்போது, எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க, எங்களுக்கு கிடைத்தது வெறும் 18 நாட்கள் மட்டுமே. அந்த நேரத்திற்குள் இவ்வளவு தூரம் ஊடுருவ முடியும் என்பதே, எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.  கிராமங்களிலும் எங்கள் கட்சியை கொண்டு ேசர்ப்போம். இவ்வாறு கமல் கூறினார்.

டெட்ராய்ட் பெருமையை தமிழகம் இழந்து விட்டது

கமல்ஹாசன் வெளியிட்ட கட்சியின் பொருளாதார திட்ட அறிக்கையில் கூறியிருப்பது: தமிழகம் இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை இழந்துவிட்டது. தொழில் முதலீடுகளில் தமிழகம் 12வது இடத்தில் உள்ளது. புரட்சிகரமான  பொருளாதார திட்டத்தினால் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியும்.


Tags : Alliance ,Rajini with Alliance: Kamal Haasan ,announcement ,Kamal Haasan , Alliance with Rajini in politics: Kamal Haasan announcement
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு