பங்குச்சந்தையில் 11 ஆண்டில் முதல்முறை ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் கோடி இழப்பு: இந்த வாரம் மட்டும் ரூ.11.63 லட்சம் கோடி அவுட்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் கோடி இழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஷாங்காய், டோக்கியோ, சியோல்,ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. சீனாவில் இருந்து  பிற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனால், பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் பதை பதைப்பில் உள்ளனர். முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை  தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும், இந்த வார துவக்கத்தில் இருந்து இழப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

நேற்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கின. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள்  சரிந்து 11,219.20 ஆனது.  இதனால், நேற்று ஒரே நாளில் மட்டும் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது. மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக  இருந்தது. கச்சா எண்ணெய் விலை மற்றும் சீன பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக அன்றைய தினம் இந்திய பங்குச்சந்தைகள் பாதிக்கப்பட்டன.

சர்வதேச பங்குச்சந்தைகளை பொறுத்தவரை, கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன. தற்போதைய சரிவுக்கு கொரோனா வைரஸ்தான் பிரதான காரணமாக கருதப்படுகிறது. கொரோனா  வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், பல்வேறு நாடுகளும் மருந்து, மாத்திரைகள், உபகரணங்களை ஸ்டாக் வைக்க தொடங்கி விட்டன. கொரோனாவால் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு வரை உலக அளவில் பொருளாதார மந்த நிலை நீடிக்கும் என  பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த வாரத்தில் மட்டும் ₹6,812.57 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர். இதுதவிர, சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை  பேரல் 50 டாலராக சரிந்து விட்டது.

இவற்றின் எதிரொலியாக, பங்குச்சந்தைகள் நேற்று மட்டுமின்றி, கடந்த 6 நாட்களாகவே தொடர்ந்து அதிக சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 6 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,872 புள்ளிகள் சரிந்துள்ளது.  இந்த வாரம் மட்டும் நேற்று வரை பங்குச்சந்தைகளில் 11,63,709.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: