×

ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்த அரசு டாக்டர்கள் இடமாற்றம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...போராட உரிமையில்லை என கண்டிப்பு

சென்னை: ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு டாக்டர்களை தமிழக அரசு பணி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், டாக்டர்கள்  போராட்டம் நடத்த உரிமை இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால்  தமிழகம். முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதையடுத்து, போராட்டம் நடத்திய டாக்டர்கள் குழுவிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு சார்ஜ் மெமோ எனும் குற்றச்சாட்டு  குறிப்பாணையும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்  பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 8 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த  வழக்கு கடந்த முறை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து  நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு  விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் சி.கனகராஜ், கே.சி.கார்ல் மார்க்ஸ், எம்.ஆர்.ஜோதிமணியன் ஆகியோர் ஆஜராகினர். அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று அளித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடலாமா?, நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்பதால் டாக்டர்களின் போராட்டத்திற்கு அரசுதான் பொறுப்பா?,  போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோ அவர்களுக்கு தண்டனை போன்றதா?, இந்த சார்ஜ் மெமோவை ரத்து செய்வதில் நீதிமன்றம் தலையிட முடியுமா? இந்த கேள்விகள்தான் இப்போது எழுந்துள்ளது. டாக்டர்களை பொறுத் தவரை அவர்கள் வேலை நிறுத்தம், போராட்டம் நடத்த அடிப்படை உரிமை இல்லை. டாக்டர்கள் போராட்டம் நடத்தினால் பாதிக்கப்படுவது மக்கள்தான். நோயாளிகளின் உயிரோடு விளையாடக் கூடாது. எந்த  சூழ்நிலையிலும் டாக்டர்கள் போராட்டம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.

அதே நேரத்தில் போராட்டம், வேலை நிறுத்தம் ஆகியவை ஒரே நாளில் திட்டமிடப்படுவதில்லை. நீண்ட கால கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில்தான் போராட்டம் தொடங்கும். டாக்டர்கள் போராட்டம் நடத்தினால் அதன்  விளைவு நோயாளிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுதான்.  தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டாக்டர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் 2019 ஆகஸ்ட் 27ல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை  அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், 6 வாரங்களாகியும் எந்த முடிவும் அரசுத் தரப்பிலிருந்து வராததால் 2019 அக்டோபர் 25ம் தேதி டாக்டர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மக்கள் நலனை காப்பதுதான் மக்கள் நலன் அரசின் கடமை. மக்களின் சுகாதாரம் உறுதி செய்யப்படவேண்டும். மக்களின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பான முடிவை அரசு தெரிவிக்க  வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிடக்கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்படும்போதுதான் போராட்டம் தொடங்கும். டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல நோயாளிகளின் உயிர் கேள்விக்குரியாகிவிட்டது. அதே நேரத்தில் டாக்டர்களின் கோரிக்கை தொடர்பாக அறிவிப்பு வந்தவுடன் அக்டோபர் 30ம் தேதி  போராட்டத்தை டாக்டர்கள் வாபஸ் பெற்றனர்.

அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றபிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சங்க நிர்வாகிகள், முன்னணியில் இருந்தவர்கள் என 135 டாக்டர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சார்ஜ் மெமோ, பணியிட மாற்ற உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டன.
போராட்டத்தில் 18,000 டாக்டர்கள் பங்கேற்ற நிலையில் 135 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களை தண்டிக்கும் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை. மற்ற நிறுவனங்கள் பணியாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு  அரசு உதாரணமாக இருக்க வேண்டும்.

எனவே, மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோ, பணி இடமாற்றம் ஆகிய உத்தரவுகளை இந்த நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிடுகிறது. ராமாயணத்தில் சுக்ரீவனுக்கு ராமர் அறிவுரை கூறும்போது, “ அரசன் ஸ்தானத்தில் இருந்து ஆட்சி செய்வதல்ல சரியான ஆட்சி. தாய் குழந்தையை கவனிப்பதுபோல் ஆட்சி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதேபோல்தான், அரசும் இருக்க வேண்டும். அரசு மருத்துவர்களை அரவணைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கில் வெற்றி, தோல்வி என்ற நிலை எடுக்காமல் மக்கள் நலன் கருதி  டாக்டர்களுடன் பேசி உரிய தீர்வை அவர்களுக்கு அரசு தர வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

* கடந்த ஆண்டு அக்டோபரில் அரசு மருத்துவர்கள்  ஐந்து நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
* 135 டாக்டர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சார்ஜ் மெமோ, பணியிட மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
* அரசு மருத்துவர்களை அரவணைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என நீதிபதி கூறினார்.



Tags : Government doctors ,pay hike ,Chennai High Court ,Government ,transfer ,doctors , Government cancels transfer of striking doctors demanding pay rise: Madras High Court
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...