×

தோடு, மூக்குத்தியை தர மறுத்ததால் மூதாட்டியை கழுத்தறுத்து கொன்ற வாலிபர் கைது

சேலம்: சேலத்தில் தோடு, மூக்குத்தியை தர மறுத்ததால், மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெள்ளித் தொழிலாளியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அடுத்த திருமலைகிரி கொல்லத் தெருவைச் சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (75). பெரியண்ணன் இறந்துவிட்ட நிலையில், தனது 2வது மகன் முத்து பராமரிப்பில் பழனியம்மாள் இருந்து வந்தார். நேற்று மாலை, வீட்டிற்கு அருகில் உள்ள ரேஷன் கடை முன்பு பழனியம்மாள் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 19 வயது மதிக்கத்தக்க வாலிபர், பழனியம்மாளுக்கு அருகே அமர்ந்து பேச்சு கொடுத்தார்.

சிறிது நேரத்தில் பழனியம்மாள் அணிந்திருந்த தோடு, முக்குத்தியை கழற்ற முயன்றார். சந்தேகத்தின் பேரில் சுதாரித்து கொண்ட பழனியம்மாள், சத்தமாக கத்தி, கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தான் வைத்திருந்த கத்தியால் பழனியம்மாளின் கழுத்தில் குத்தியதுடன், ஆட்டை அறுப்பது போல கழுத்தை அறுத்தான். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அந்த வாலிபர் பழனியம்மாளின் சுருக்கு பையை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் டூவீலரில் தப்பி சென்றான். படுகாயமடைந்த பழனியம்மாள், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த இரும்பாலை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கொலை செய்துவிட்டு தப்பியது வேடுகத்தாம்பட்டி பாறைக்காட்டை சேர்ந்த பழனிசாமி மகன் பாலாஜி (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, திருமலைகிரி பகுதியில் பதுங்கியிருந்த பாலாஜியை, இன்று காலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பாலாஜியின் தாயார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். வெள்ளிப் பட்டறைக்கு சென்றுகொண்டிருந்த பாலாஜி, சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளார். அப்போது, கஞ்சா மற்றும் சூதாட்டத்திற்கு பாலாஜி அடிமையானான். இதனால், கிடைக்கிற பணம் மற்றும் பொருட்களை வைத்து கஞ்சா புகைப்பதையும், சூதாடுவதையும் வழக்கமான கொண்டிருந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, அவனது சின்னம்மா வீட்டிலிருந்த ₹5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று சூதாடியுள்ளான். இந்நிலையில், நேற்று சூதாட பணம் இல்லாததால், மூதாட்டி பழனியம்மாளிடம் இருந்த தோடு, மூக்குத்தி மற்றும் கால் காப்புகளை திருட முயற்சி செய்துள்ளான். ஆனால், மூதாட்டி சத்தம் போட்டதால், தோடு, மூக்குத்தி கிடைக்காத ஆத்திரத்தில் கழுத்தறுத்துவிட்டு, சுருக்கு பையை மட்டும் எடுத்து தப்பி சென்றான். அந்த பையில், ₹140 மட்டுமே இருந்தது. இதனையடுத்து, பாலாஜியை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றனர்.

Tags : grandfather , Arrested
× RELATED மாவா விற்ற வாலிபர் கைது