ஆந்திர வனப்பகுதிக்கு சென்ற 14 யானைகள் ஒரே இரவில் மீண்டும் தமிழகத்துக்கு வந்தது

வேலூர்: ஆந்திர வனப்பகுதிக்கு சென்ற 14 யானைகள் ஒரே இரவில் மீண்டும் தமிழகத்துக்கு வந்து, காட்பாடி அடுத்த தொண்டான்துளசி செட்டேரியில் முகாமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் புகுந்து விவாசய நிலங்களை சேதப்படுத்தியது. இவற்றை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்ட முயன்றபோது வழிதவறி  கிருஷ்ணகிரி, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட வனப்பகுதிகள் வழியாக சென்றது. அப்போது, பல இடங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடி அருகே வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து வேலூர் வனத்துறையினர் யானைகளை கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால், யானைகள் ஆந்திர வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அங்கிருந்த விவசாய நிலங்களையும் யானைகள் சேதப்படுத்தியதால், அம்மாநில வனத்துறையினரும் விரட்டினர். இதனால், யானைகள் மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு வந்துவிட்டது. இதையடுத்து யானைகள் ஆந்திர மாநிலம் சித்தப்பாறை, காட்பாடி அடுத்த டெல் மலை, தொண்டான்துளசி, பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், வனப்பகுதிகளையொட்டி வசிக்கும் கிராம மக்கள் பீதியில் இருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டெல் மலைக்கு சென்ற யானைகள் அங்கிருந்த கம்பி வேலிகளையும், மரங்களையும் சேதப்படுத்தின. இதற்கிடையில் ஆந்திர வனத்துறையினரிடம், தமிழக வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் இருமாநில வனத்துறையினரும் சேர்ந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தமிழக வனத்துறையை சேர்ந்த வனச்சரகர் மூர்த்தி தலைமையில் 10 பேர், ஆந்திர வனத்துறையை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 20 பேர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்த 10 பேர் உதவிக்கு ெசன்றுள்ளனர். ஆனால், யானைகளை விரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு ஆந்திராவில் சித்தபாறை வனப்பகுதிக்கு சென்ற யானைகள் மீண்டும் வனப்பகுதி வழியாக காட்பாடி அடுத்த தொண்டான்துளசி செட்டேரிக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘தமிழக வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் தினமும் குறைந்தபட்சம் 40 கிலோ மீட்டர் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது. யானைகளை தொடர்ந்து விரட்டினால் கோபமாகிவிடும் என்பதால், கிராமப்பகுதிகளில் புகுந்துவிடாமல் தடுக்க அமைதியாக கண்காணித்து வருகிறோம். குறிப்பிட்ட பகுதிகளில் யானைகள் பயணிக்கும்போது, திசை திருப்பி வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றனர்.

Related Stories: