×

கேன் வாட்டர் ஆலைகள் 2ம் நாளாக வேலைநிறுத்தம்: கடலூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

கடலூர்: கடலூர், பண்ருட்டி வட்டத்தில் உள்ள 19 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து அந்த ஆலைகள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் லாரி, டிராக்டரில் வரும் தண்ணீருக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதாக ஏராளமான புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, இத்தகைய சட்ட விரோத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்காணிப்பதற்காக பொதுப்பணித்துறை (நிலத்தடி நீர் பிரிவு) மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட ஐந்து அரசுத்துறைகள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி குடிநீர் விற்பனை நிறுவனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். கடலூர் கோட்டத்தில் 19 நிறுவனங்கள் பொதுப்பணித்துறை, உணவு கட்டுப்பாட்டுத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றில் உரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்தந்த வட்டங்களில் நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
கடலூர் கோட்டத்தில் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் கடலூர் தாசில்தார் செல்வக்குமார் மற்றும் பணியாளர்கள் சிங்கிரிகுடி, திருவந்திபுரம், எம்.புதூர், அரிசிபெரியாங்குப்பம், ராமாபுரம், வழிசோதனைபாளையம், கண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்ததாக 14 நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.

இதேபோன்று பண்ருட்டி வட்டத்தில் 4, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 1 உள்ளிட்ட 19 நிறுவனங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம் கோட்டங்களில் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த்துறை தரப்பினர் தெரிவித்தனர்.அரசின் நடவடிக்கையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 100 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளன. தினமும் 30 ஆயிரம் லிட்டர் வரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த குடிநீர் விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதன்மூலம் சுமார் 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் இதனால் வேலையிழந்துள்ளனர். இதையடுத்து வழக்கமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் லாரி, டிராக்டர்களில் எடுத்துவந்து தெருக்களில் வழங்கப்படும் தண்ணீருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே அரசு இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், அரசே போதுமான அளவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : water plants ,Cuddalore district , Drinking Water
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!