மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த 2016ம் ஆண்டு முதல் நாடு முழுவதும், கோடை மற்றும் குளிர் தொடர்பான பருவகால வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய காலமான கோடை காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) வெப்பநிலை எப்படி இருக்கும் என்பது குறித்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்த ஆண்டு கோடை காலத்தில், நாட்டின் வட மேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகள், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வழக்கத்தை விட உயர வாய்ப்புள்ளதாகவும், அது வெப்ப அலையாக மாறவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, மராட்டியம் மற்றும் கடலோர ஆந்திராவின் சில பகுதிகள் அடங்கும்.

குறிப்பாக ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசத்தில் இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 0.37 டிகிரி செல்சியஸ் முதல் 0.41 செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த அளவிலேயே வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன், வெப்பநிலை தொடர்பான இந்த அறிவிப்பு அடுத்து வரும் 3 மாதங்களுக்கானதாகும். தமிழகத்தில் கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் வெப்பநிலை உயர்வு தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. வெப்பநிலை உயர வாய்ப்பிருந்தால், அது தொடர்பாக உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும், என்று கூறியுள்ளார்.

Related Stories: