×

தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: 2 நாள் பணியாக வனத்துறையினருடன் மாணவர்களும் பங்கேற்பு

கன்னியாகுமரி:  தமிழகம் முழுவதும் சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகள் நிறைந்திருக்கும்போது ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தமிழகத்திற்கு வந்து இனப்பெருக்கம் செய்யும். பின்னர் தனது குஞ்சிகளுடன் நாடு திரும்புவது வழக்கம். இப்படி வந்துசெல்லும் பறவைகளுக்கான கணக்கெடுக்கும் பணியானது தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. 2 நாட்கள் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் பறவைகளின் வகைகள், எண்ணிக்கை போன்றவற்றை கண்டறியப்படுகின்றன. இதில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், வனச்சரகர் கருப்பையா, கால்நடை மருத்துவர் மனோகரன், ராணி அண்ணா அரசு கல்லூரி மாணவியர், இயற்கை ஆர்வலர்கள் ஆகிய 50 பேர் 10 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியை துவக்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம்:

கன்னியாகுமரியில் சுசீந்திரம், தேரூர், மாடிக்குச் தேரி, ராஜாக்கமங்கலம், சாமித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இவற்றில் இதுவரை அரியவகை பறவைகளான கோழிக்கரா, பூ நாரை, வர்ணநாரை உள்ளிட்ட 80 வகையான பறவைகள் காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்:

மரக்காணம் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சதுப்புநில பகுதி உள்ளது. இங்கு 1000க்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளதால், வனத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம்:

இதேபோல் திருநெல்வேலியில் கூந்தன்குளம் காடன்குளம், விஜயநாராயணம், திருப்புடைமருதூர் போன்ற 10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 45,000 பறவைகள் இருந்தன. இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பதால் கூடுதல் எண்ணிக்கையில் பறவைகள் வர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம்:

கோடியக்கரை சரணாலயத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்‍கெடுப்பின்போது, பறவைகளின் வகைகள், அவை வந்து செல்லுவதற்கான நோக்கம், எண்ணிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.


Tags : Tamil Nadu ,Forest Department , Tamilnadu, Birds, Survey, Start, Forest Department, Students, Participation, Naga
× RELATED கொடைக்கானலில் யானை-மனித மோதல்களை தவிர்க்க வனத்துறையினருக்கு பயிற்சி