×

மீனாட்சியம்மன் கோயிலின் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

மதுரை:  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 2ஆயிரம்  ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனை தனி அதிகாரிகள் குழு அமைத்து மீட்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மதுரையின் மகத்தான பழம் பெருமை மிக்க ஆன்மிகத் தலமாக மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு முன்னோர்கள் தானமாக கொடுத்த இடங்கள் மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம், சொத்துகள் இருக்கின்றன. இந்த இடங்களில் ஒரு பகுதியில் பலர் குத்தகை மற்றும் வாடகை அடிப்படையிலும் வசித்து வருகின்றனர். பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களில் சிக்கி இருக்கிறது. இந்த இடங்கள் ரூ.பல கோடி மதிப்பு உள்ளதாகும்.

சில மாதங்கள் முன்பு மதுரை தெற்குவாசல் பகுதியில் மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தியேட்டர்கள், வீடுகள் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டன. இதேபோல் மதுரையில் எல்லீஸ் நகர், பொன்மேனி, சிம்மக்கல் போன்ற இடங்களில் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. இதுமட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலும் மீனாட்சி கோயில் இடங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதன்பேரில் நடவடிக்கை எடுத்து மீட்கப்பட்ட இடங்கள் மீண்டும், ஆக்கிரமிப்பாளர்கள் கைகளுக்கு சென்று விடாமலும், மீட்கப்பட வேண்டிய நிலங்கள் பட்டியல் தயாரித்து அவற்றை திரும்ப கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது அவசியம்.

மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த ஆன்மிக ஆர்வலர் கண்ணன்(75) கூறும்போது, ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதி மக்கள் தங்களது நிலங்களை தானமாக கொடுத்துள்ளனர். மதுரையில் கே.கே.நகர், மாரியம்மன் தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகள், எல்லீஸ் நகர், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை பகுதியில் 300 ஏக்கர் உட்பட தென்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகளவில் கோயிலுக்கான நிலங்கள் உள்ளன. இந்த இடங்களை முறையாக கோயில் நிர்வாகம் பராமரிக்க வில்லை. அதனை முறையாக பராமரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை கோயிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என சட்டத்தில் உள்ளது.

அதனை கண்காணிக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால் பல நூறு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்க தனி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அவர்களும் மீட்கும் பணியில் முழு கவனம் செலுத்தவில்லை. நிலம் மீட்பு, கோயில் நிலங்கள் எங்கு எல்லாம் உள்ளது என கணக்கு எடுக்க அதிகாரிகளுக்கு வாகன வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் கோயில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. இதனால் அதிகாரிகள் எந்த பணிகளும் முழுமையாக கவனம் செலுத்த  முடியாத நிலை உள்ளனர். எனவே, அதிகாரிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்து நிலங்களை மீட்க உரிய வழிகளை கோயில் நிர்வாகம் மேற்கொள்வது அவசியம்’’ என்றனர். மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலங்கள் பட்டியலை முதலில் முழுமையாக தயாரிப்பதுடன், அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை கோயில் நிர்வாகத்துடன், அரசும் கைகோர்த்து களமிறங்கிட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமாகும்.


Tags : Meenakshiamman temple ,Meenakshiamman , Of the Meenakshiamman temple 2 thousand acres of land occupation
× RELATED மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாஸ்க்