உலக திறனாய்வு போட்டியில் காலணிகள் வழங்காததால் வீரர்கள் விழுந்து காயம்

மதுரை:  மதுரையில் நடந்த உலக திறனாய்வு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் (ஷூ) வழங்காததால் ஓடும் போது பலரும் கீழே விழுந்து காயமடைந்தனர். மதுரை மாவட்டம் சார்பில்  உலகத்தரத்திற்கு இணையான விளையாட்டு வீரர்களை கண்டறியும் பொருட்டு பள்ளியில் 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உலகத் திறனாய்வு  திட்ட தடகள போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை கிளை சார்பில் நடந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் துவக்கி வைத்தார்.

Advertising
Advertising

பள்ளி கல்வித்துறையின் விளையாட்டுப் பிரிவை சேர்ந்த உடற்கல்வி ஆய்வாளர் (பொ) செங்கதீர் தலைமை வகித்தார். மதுரை, உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களுக்கு தடகள போட்டிகள் நடந்தன. மதுரை கல்வி மாவட்டத்திற்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கியது. உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மேலூர் கல்வி மாவட்டத்திற்கு மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தன.

இதில் 100மீ., 200மீ., 400மீ., தூர ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற தடகள போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. காலணிகள் (ஷூ) வழங்காததால் வெயிலின் தாக்கம் காரணமாக பலரும் கீழே விழுந்து காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மதியம் 12 மணிக்கு தாமதமாகத்தான் வந்தது. அதுவரை காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி கூட வழங்க முடியவில்லை என வீரர்கள் புலம்பினர்.

Related Stories: