பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலை: பணி நியமன உத்தரவை வழங்கினார் ஆட்சியர்

கன்னியாகுமரி: பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) கடந்த ஜனவரி 8ம் தேதி இரவு 9.30 மணியளவில் களியக்காவிளை அருகேயுள்ள சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இதுதொடர்பாக தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், மாலிக்தினார் நகரை சேர்ந்த தவுபிக் ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது, தீவிரவாதிகள் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்களின் வெளிநாட்டு தீவிரவாதிகள் தொடர்பு, தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு போன்றவையும் வெளிச்சத்திற்கு வந்திருந்தன. எனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ)க்கு மாற்றப்பட்டு, விசாரணை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் ரிநிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் மகள் ஆன்றீஸ் நிஜாவிற்கு வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வழங்கியுள்ளார். முன்னதாக, வில்சன் குடும்பத்துக்கு தகுந்த நிவாரணம் மற்றும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: