அறிவும் வளரணும்... அறிவியலும் வளரணும்...

ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ச்சி மிக முக்கியமானது. ஒரு நாட்டுக்கு அறிவியல் வளர்ச்சி மிக மிக முக்கியமானது. இவ்வுலகில் எந்த ஒரு செயல்பாடும், அறிவியலை மையமாகக் கொண்டுதான் உருவாகின்றன. அது கண்ணுக்கு தெரிந்ததாகவும் இருக்கலாம். தெரியாததாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு : புவி ஈர்ப்பு விசை போல. தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையே அறிவியல் ஆராய்ச்சிகள்தான். அதனால்தான் நாம் இருந்த இடத்தில் இருந்தே, பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது. நேர விரயங்களை தவிர்த்து பல வேலைகளை, உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்யவும் முடிகிறது. அந்த அறிவியலை போற்றி பாதுகாக்கத்தான், ஆண்டுதோறும் பிப்.28ம் தேதியன்று ‘தேசிய அறிவியல் தினம்’ என கொண்டாடி வருகிறோம்.

Advertising
Advertising

அதென்ன பிப்.28ம் தேதி என்கிறீர்களா?

சர்.சி.வி.ராமனின் ‘ராமன் விளைவு’ பற்றி படித்திருப்பீர்கள். அப்போது உலக ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது ஆய்வு இது. இந்த விளைவுகளை அவர் உணர்வதற்கு ஒரு பயணம் காரணமாக இருந்தது என்றால் நம்புவது கடினம். ஆனால், அதுதான் உண்மை. 1921ம் ஆண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்குச் சென்ற சர்.சி.வி.ராமன் நாடு திரும்பிக் கொண்டிருந்தார். மத்தியதரைக்கடல் வழியாக கப்பலில் பயணம் செய்த அவருக்கு, கடலின் நீல நிறத்துக்கு வெறும் வானத்தின் பிரதிபலிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என உறுதியாக நம்பினார்.

தண்ணீரிலுள்ள மூலக்கூறுகளால் சூரிய ஒளிச்சிதறல் ஏற்பட்டு கடல் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அவரின் ஆய்வுக்குழு, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு திரவநிலை மட்டுமல்லாது திடப்பொருள்களினாலும் ஏற்படும் ஒளிச்சிதறல் குறித்த அளவீடுகளைக் கண்டறிந்தனர். ராமனின் இந்தக் கண்டுபிடிப்பு மற்ற உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. தனது ஒளி விளைவு கோட்பாட்டை உறுதி செய்வதற்காக ராமன் லேசர் ஒளியைப் பயன்படுத்தியதன் மூலம், பின்னாளில் நாம் பயன்படுத்தும் கணினியுடன் கூடிய ஸ்பெக்ட்ரோமீட்டர் கண்டுபிடிக்கப்பட்டு இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியியல், உயிர்வேதியியல், மருந்து உற்பத்தி தொழில்நுட்பம் முதலான அறிவியல்சார் ஆராய்ச்சிகளுக்குப் பயன்பட்டு வருகிறது. ஒரு மிகப்பெரிய அறிவியல் புரட்சியாக ‘ராமன் விளைவு’ கொண்டாடப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு அரிய நிகழ்வின் அறிமுக தேதியான 1928ம் ஆண்டு, பிப்.28ம் தேதியைத்தான், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.

தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு 1986ம் ஆண்டு முதன்முதலாக இந்தத் தினத்தை அறிவித்தது. அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், சிறந்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தேசிய விருதும் இந்நாளில் வழங்கப்பட்டு வருகிறது. சர்.சி.வி.ராமனைப்போலவே எத்தனையோ இந்திய விஞ்ஞானிகள் உலகளவில், தங்களது பெயரை நிலைநாட்டினாலும், இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைவு என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. குறிப்பாக, பள்ளி அளவில் அறிவியல் ஆர்வமுடைய மாணவர்களை ஊக்கப்படுத்தி, ஆராய்ச்சியில் ஈடுபடுத்த பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். இந்தியாவில் அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்காக நவீன அளவிலான மாபெரும் ஆய்வகங்களை தொடங்க வேண்டும். அப்போதுதான், நம் நாட்டில் இன்னும் பல சர் சி.வி.ராமன்கள் தோன்றுவார்கள். ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு நம் அறிவை பயன்படுத்துவோம்... அறிவியலையும் பயன்படுத்துவோம்.

Related Stories: