உத்தமபாளையம் அருகே போதிய பஸ் வசதியின்றி மாணவ, மாணவியர் அவதி

உத்தமபாளையம்: ராயப்பன்பட்டியில் படிக்கும் மாணவ, மாணவியரின் நலன்கருதி, கம்பம் மற்றும் உத்தமபாளையத்திலிருந்து ராயப்பன்பட்டி வழியாக அதிக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையம் அருகே, ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அதிகமாக படிக்கின்றனர். இந்நிலையில், உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி வழியாக கம்பத்திற்கும், கம்பத்திலிருந்து கே.கே.பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் வழியாக உத்தமபாளையத்திற்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertising
Advertising

இந்நிலையில், ராயப்பன்பட்டி  வழியாக போதிய பஸ் வசதி இல்லாததால், அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் வெளியூர் மாணவ, மாணவியர் காலை நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லவும், மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பவும் அவதிப்படுகின்றனர். மேலும், ராயப்பன்பட்டி மார்க்கத்தில் உள்ள கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் அவதிப்படுகின்றனர். கிராமப்புற மாணவ, மாணவியர் ராயப்பன்பட்டி செல்ல, பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது.

குறிப்பாக பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவியர் அரசு பஸ்களை நம்பி நிற்கின்றனர். ராயப்பன்பட்டியில் பள்ளி முடிந்தவுடன் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்ல மாணவ, மாணவியர் மிகவும் அவதிப்படுகின்றனர்.

எனவே, கிராமப்புற மாணவ, மாணவியர் ராயப்பன்பட்டிக்கு எளிதாக செல்ல உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி வழியாகவும், கம்பத்திலிருந்து கே.கே.பட்டி வழியாகவும் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கூறுகையில், ‘கம்பம் பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து தினந்தோறும் மாணவர்கள் ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

ஆனால், போதிய பஸ்வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அதிக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வழியாக அதிக பஸ் இயக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: