×

சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்

சந்திரசேகர வெங்கட்
ராமன் தமிழ்நாட்டின் திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் சந்திரசேகர ஐயர்-பார்வதி அம்மையாருக்கு இரண்டாவது குழந்தையாக 1888ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தார். இவரது தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் தன்னுடைய பி.ஏ பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907ம் ஆண்டு ஜனவரியில் எம்.ஏ பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சி.வி.ராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், 1907ம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதலிடம் பெற்று ஜூன் மாதம் கொல்கத்தாவில் உள்ள கணக்கு துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையை துவங்கினார்.

பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீடத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்தார்.  கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன்பின் அவராகவே நிறுவிய ராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.

சி.வி ராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக் கழகத்தை ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டுமின்றி இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் என்னும் கழகத்தை தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து. அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயின்ஸ் என்னும் ஓர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

1924ம் ஆண்டில் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் ப்பெலோசிப் விருது வழங்கப்பட்டது. இந்திய இயற்பியல் ஆய்விதழில் பிப்ரவரி 28, 1928ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) என்னும் தலைப்பில் தம் ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபால் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. அதுதான் ராமன் விளைவு ஆகும். இவர் வயலின் (பிடில்), மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக்கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார். 1929ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு நைட் ஹட் எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தது. மேலும் அதே ஆண்டில் இங்கிலாந்து அரசியரால் சர் பட்டம் அளிக்கப்பட்டது.

1930ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான மேட்யூச்சி பதக்கம் வழங்கப்பட்டது. 1935ஆம் ஆண்டில்மைசூர் அரசர் ராஜ்சபாபூசன் என்ற பட்டத்தை  வழங்கினார். 1941ம் ஆண்டில் பிலிடெல்பியா நிறுவனத்தின் “பிராங்க்ளின்” பதக்கம்  வழங்கப்பட்டது. 1954ம் ஆண்டில்  இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருதும் 1957ம் ஆண்டில் அகில உலக லெனின் பரிசு விருதும் அவருடைய வாழ்நாளிலேயே வழங்கப்பட்டது. இவர் 1970ம் ஆண்டு பெங்களூரில் நவம்பர் 21ம் தேதி இயற்கை எய்தினார். 1986ம் ஆண்டு இந்திய அரசு தேசிய அறிவியல் தினம் என்று ஒரு நாளை கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தது. தேசத்தலைவர்கள்  தியாகிகளை கொண்டாடுவது போல் அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987ம் ஆண்டு முதல் பிப்ரவரி 28ம் நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாறு மற்ற தினங்களைப்போல் அல்லாமல் வழக்கத்திற்கு மாறானது. பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்தநாள் அல்லது நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அறிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும், சிறந்த இயற்பியல் மேதையுமான சர்.சி.வி.ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் நாள் தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.

எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையான அறிவியலில் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளை கண்டறிவதும், அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், கண்டுபிடிப்புகளை வரவேற்பதுவுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணர செய்வதே இந்நாளின் நோக்கமாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அறிவியல் பயன்பாடு விஞ்ஞானிகள் படித்தவர்கள் மட்டும் அல்லாமல் சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

Tags : CV Raman ,National Science Day , Sir C.V. Raman's research day Today is National Science Day
× RELATED பள்ளி மாணவிக்கு சிஇஓ பாராட்டு