வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் கிடைக்கக்கூடிய ஒரு கிலோ இயற்கை உரத்தை ஒரு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை

வேலூர்:  வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இருந்து தினமும் 200டன் வரையில் மக்கும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக மக்கும் குப்பைகளை இயற்கை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சிமென்ட் கம்பெனிகளுக்கும், கண்ணாடி பாட்டில்களை தார் சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எலக்டரானிக் கழிவுகள் தனியார் கம்பெனிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன கலப்பின்றி காய்கறிகள், உணவுக்கழிவுகள், இலை தழைகள் போன்றவற்றை 90 நாட்கள் வரையில் மக்க வைக்கப்படுகிறது. பின்னர் உரமாக மாற்றப்படுகிறது. இந்த இயற்கை உரத்தை மாநகராட்சிக்கு உட்பட்ட விவசாயிகள் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகங்களிலும் ஆரம்பத்தில் விளம்பர பேனர் வைத்து இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விவசாயிகள், ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். இந்நிலையில் சமீபகாலமாக, மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மையங்களில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு மூட்டைகளில் அடுக்கி வைத்து கிடப்பில் உள்ளது. ஒரு கிலோ இயற்கை உரத்தை ஒரு ரூபாய் கொடுத்து வாங்க ஆளில்லாமல் உள்ளது.

மாநகராட்சியில் உள்ள இயற்கை உரத்தை வாங்க வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தலாம். ஆனால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் இயற்கை உரம் விற்பனை செய்ய வேளாண்மைத்துறையின் ஒத்துழைப்புக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ இயற்கை உரம் ஒரு ரூபாய் கொடுத்து வாங்க ஆளில்லாத நிலை உள்ளது. வேளாண்மைத்துறை ஒத்துழைப்பு கொடுத்தால் இயற்கை உரம் விற்பனையாகும். எனவே வேளாண்மைத்துறையின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளோம், என்றனர்.

குறைந்த விலையில் ரசாயன உரம் கிடைக்கிறது

இயற்கை உரத்தை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து லாரிகள், டிராக்டர்களில் பெற்றுச்செல்ல வேண்டும். உரம் என்னவோ ஒரு ரூபாய்தான், ஆனால் லாரிகள், டிராக்டர்களின் வாடகை ஆயிரத்தை தாண்டிவிடுகிறது. இதனால் ₹200 முதல் ₹300 வரையில் கிடைக்கும் ரசாயனம் கலந்த உரத்தை விவசாயிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு இயற்கை உரம் கிடைக்க எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து, மாநகராட்சி நிர்வாகமும், கலெக்டரும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: