காரைக்குடியில் 10 நாளில் பல்லை காட்டும் தார்ச்சாலை

காரைக்குடி: காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் முடிந்த பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவை தரமாக போடாததால் சாலை போட்ட சில நாட்களிலேயே பிளவுபட்டும், பள்ளம் விழுந்தும் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு ரூ.112 கோடியே 53 லட்சம் ஒதுக்கி உள்ளது. வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து நபர் ஒருவருக்கு தினமும் 115 லிட்டர் கழிவுநீர் என கணக்கிடப்பட்டு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுநீர் சேகரிக்க 5559 ஆள்நுழைவு தொட்டிகள் கட்டப்பட உள்ளன. 151.525 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன.

100 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. கழிவுநீர் தேவகோட்டை ரஸ்தா சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு எதிரே அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திடமிடப்பட்டுள்ளது. 16 எம்.எல்.டி கழிவு நீர் சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால் தெருக்களில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. பள்ளம் இருப்பது தெரியாமல் மக்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. பணி முடித்த பகுதிகளில் சாலை அமைக்க பல கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒருசில பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. தரமான சாலையாக அமைக்காததால் பல இடங்களில் போட்ட சில மாதங்களிலேயே பள்ளம் விழுந்துள்ளது. பாதாள சாக்கடைக்கு என போடப்பட்டுள்ள ஆள்நுழைவு தொட்டிகளுக்கு அருகே பெரும்பாலான இடங்களில் பள்ளம் உள்ளது. இந்நிலையில் சந்தைபேட்டை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை பிளவுபட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பலகோடி நிதி ஒதுக்கி சாலை அமைக்கின்றனர். ஆனால் அதனை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது கிடையாது. சாலை போடப்பட்ட அனைத்து இடங்களிலும் பள்ளம் ஏற்பட்டு பேட்ஜ் ஒர்க் பார்த்துள்ளனர். சாலை அமைக்க ஒதுக்கப்படும் நிதியில் பெரும் தோகையை கமிஷனாக பெறுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சாலையை சம்மந்தப்பட்ட ஒப்பந்தகாரர் தரமானதாக அமைக்கிறார்களா என கண்காணிப்பது கிடையாது. தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலை வரும் மழைக்காலத்திற்குள் நிச்சயம் பல்லை காட்டும்’ என்றனர்.

Related Stories: