டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு; தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவுக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்குள் சிபிஐயும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில், மனித நேய அறக்கட்டளை மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் படித்த 74 பேரில் 62 பேர் தேர்வாகி இருந்தனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என சுவப்னா என்ற திருநங்கை வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் குற்றச்சாட்டிற்கு உள்ளான பயிற்சி மையங்கள், ஆளுங்கட்சியை சார்ந்த செல்வாக்கு மிக்க நபரால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படும் வினாத்தாள்களை பெற்று, தங்களுடைய பயிற்சி மையங்களில் படிப்பவர்கள் தேர்வுகளில் முறைகேடாக வெற்றி பெற உதவுகிறார்கள். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புலன் விசாரணை முடிந்து விசாரணை அறிக்கைகள் சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. விரைவிலேயே இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாதத்தை கேட்ட நீதிபதிகள் வரும் ஏப்ரல் 6-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: