×

சேலம் அருகே நூற்பாலை நிர்வாகம் டார்ச்சர் வேலைக்கு சென்ற தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை

ஜலகண்டாபுரம்: சேலம் அருகே நூற்பாலை நிர்வாகத்தினரின் டார்ச்சரால், கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(45). இவருக்கு தேவகி(40) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் ஜலகண்டாபுரம் அடுத்த காப்பரத்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில், கடந்த 25 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு, ஆலை நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, வெங்கடேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, மீண்டும் பணியில் சேர்ந்து, கடந்த 9 மாதமாக வேலை பார்த்து வந்தார்.

ஆனால், நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாலும், ஆலை நிர்வாகத்தினர் அவரை பல விதமாக டார்ச்சர் செய்து வந்தாக தெரிகிறது. இதனால், வெங்கடேஷ் மன உளைச்சலுக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டில் மனைவியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஆலை வளாகத்தில் உள்ள கிணற்றில், வெங்கடேஷ் சடலமாக கிடந்தார். இதனை கண்டு வேலைக்கு வந்த தொழிலார்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வெங்கடேஷின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆலை முன் திரண்டு, கிணற்றில் கிடந்த வெங்கடேஷின் உடலை கண்டு கதறி அழுதனர். அப்போது, அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் தெரிவித்து, ஆலையை முற்றுகையிட்டனர்.

மேலும், கிணற்றில் இருந்து அவரது சடலத்தை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த தகவலின்பேரில், ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வெங்கடேஷின் உறவினர்கள் கூறுகையில், ‘ஆலையில் மறுபடியும் பணிக்கு சேர்ந்த நாள் முதலே, ஆலை நிர்வாகம் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தது.

இதனால், மனமுடைந்த வெங்கடேஷ் வேலைக்கு வந்த இடத்தில் மன அழுத்தத்தால் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே,இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, வெங்கடேஷ் சாவுக்கு காரணமான ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை எடுக்க விட மாட்டோம்,’ என்றனர். இதுகுறித்து மேட்டூர் ஆர்டிஓ முன்னிலையில்,பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி பாஸ்கரன் உறுதி கூறினார். இதன்பேரில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு வெங்கடேஷின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Tags : suicide ,spinning department torcher ,well ,Salem , Spinning Administration Torture near Salem Worker commits suicide by jumping into a well
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...