நாமக்கல் மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் 38 ஏக்கரில் உருவாகும் அரசு மருத்துவக்கல்லூரி

* 338 கோடி செலவில் அமைகிறது  * ஓராண்டுக்குள் பணி முடிக்க திட்டம்

நாமக்கல்: சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கடந்த 1997ம் ஆண்டு இறுதியில், நாமக்கல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அப்போதே நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தும்மங்குறிச்சி பகுதியில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 530 ஏக்கரில் உருவாக்கப்பட்டது. முதலில் அந்த இடத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்பி அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், கூடுதல் அரசுத்துறை அலுவலக கட்டிடங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், வனத்துறை அலுவலகம் என அனைத்து துறை அலுவலகங்களும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது, இம்மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும். மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோரின் முயற்சியால், நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில், 38 ஏக்கர் நிலத்தை மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஒதுக்கியுள்ளார். 338.76 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் 5 தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்புகள் போன்றவை தனித்தனியாக அமைகிறது. மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி, பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுமான பணியை 2 தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு டெண்டர் விட்டுள்ளனர். அடிக்கல் நாட்டு விழா முடிந்தவுடன், பணிகள் தொடங்கப்பட உள்ளது. கட்டுமான பணிக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக கல்லூரி அமையும் இடத்தில் கட்டுமான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பல்வேறு வசதிகளுடன் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது.

கல்லூரி வளாகத்திலேயே மாணவர், மாணவிகளுக்கென தனித்தனி விடுதி வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும், செவிலியர் விடுதிகள் தனித்தனியாக அமைகிறது. சுமார் ஓராண்டுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், உயர்தர சிகிச்சை பெற சேலம் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு தற்போது சென்று வருகிறார்கள். நாமக்கல்லில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்வேறு வசதிகள் இருந்தாலும், விபத்தில் அடிபட்டு சாதாரண காயத்துடன் வரும் நபர்களை கூட, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இங்குள்ள மருத்துவர்கள் அனுப்பி வைக்கும் கொடுமை பல ஆண்டாக நடந்து வருகிறது.

இதன் காரணமாக சேலம் செல்வதற்குள் உயிரிழப்புகளும்  கடந்த காலங்களில் நிகழ்ந்தது. நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைவதன் மூலம், இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உயர்தரமான சிகிச்சைகள் கிடைக்கும். இதனிடையே, அரசு மருத்துவக்கல்லூரி, கலெக்டர்  அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைய உள்ளதால், அந்த பகுதியில் உள்ள  நிலத்தின் மதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. பெருந்திட்ட வளாகத்தை சுற்றி ஏராளமான  பிளாட்டுகள் காலியாக கிடந்தன. தற்போது, அந்த பிளாட்டுகளுக்கு கடும்  கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை - அமைச்சர் உறுதி

அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  ‘கடந்த 9 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 2 கலைக்கல்லூரிகள், 4 தாலுகாக்கள், சட்டக்கல்லூரி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அரசு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்படும். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்படும். வரும் 5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில், துணை முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரி அமைவதன் மூலம், இம்மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை வசதி கிடைக்கும்,’ என்றார்.

Related Stories: