பிளஸ்2 தேர்வு பணி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு வினாத்தாள் பீரோ சாவி தனி அலுவலரிடம் மட்டுமே இருக்க வேண்டும்

நெல்லை: வினாத்தாள் காப்பு பீரோவின் சாவி தனி அலுவலரிடம் மட்டுமே இருக்கவேண்டும். தேர்வின் போது உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை இருக்கும் என பிளஸ்2 பொதுத்தேர்வு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிளஸ்2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடக்கிறது. இதுபோல் பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 4ல் தொடங்கி 26ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தேர்வை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் உதவி இயக்குநர் நிலையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நெல்லை முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி தலைமையில் நேற்று பாளையில் உள்ள பள்ளியில் நடந்தது. இதில் தேர்வுத்துறை அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்களும் பேசினர்.

கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: கடந்த ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகள் அனைத்து எந்த பிரச்னையும் இன்றி நல்ல முறையில் நடைபெற தேர்வுப்பணி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைத்து முழு மூச்சுடன் உழைக்க வேண்டும். தனி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை இன்று (28ம் தேதி) நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட அனைத்து விதமான வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வினாத்தாள் வைக்கவும், விடைத்தாள் வைக்கவும் தேர்வு தொடர்பான பிற கோப்புகளை வைக்கவும் பள்ளிகளில் தனித்தனி பீரோக்களை பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சிஇஒ உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக்கு  வரும் போது மட்டுமின்றி எந்த நேரமும் இந்த பீரோக்களின் சாவிகள் தனி அலுவலரிடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இதில் தவறுகள் நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை இருக்கும். எனவே மிக கவனமாக இருக்க வேண்டும். நோடல் அலுவலர்கள் கொண்டு வரும் வினாத்தாள் கட்டுக்களை வாங்கும் போதே அன்றைய தேர்வுக்கு உரியதுதானா என்பதை தேதி உள்ளிட்டவைகளை பார்த்து உறுதிசெய்து கொள்ள வேண்டும். செல்போன் சுவிட்ச் ஆப் செய்து இருக்க வேண்டும். தேர்வு கட்டுப்பாட்டு அறையில் நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை சரியான நேரத்தை திருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற கடிகாரங்கள் இருந்தால் அவற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

 கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒரே கடிகார நேரத்தை வைத்து மட்டுமே தேர்வை தொடங்கி முடிக்க வேண்டும். தேர்வு நடக்கும் அறைகள் தவிர மற்ற அறைகளை பூட்டுபோட்டு பூட்டி வைக்க வேண்டும். பெரிய பள்ளிகளாக இருந்தால் ஒரே பெரிய ஹால் இருக்கும் நிலையில் அந்த அறையை பயன்படுத்த வேண்டும். எந்த நிலையிலும் மாணவர்கள் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது. தேர்வு அறை சுவற்றில் ஏதாவது எழுதி வைத்திருந்தால் அதை மறைக்க வேண்டும். காப்பி அடிப்பதால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்க வாசகங்களை மாணவர்கள் கண்களில் படும் வகையில் தேர்வுகூட முகப்பில் வைக்கவேண்டும்.

டாப் ஷீட் மாற்றி வைத்து தைக்கப்பட்டிருப்பது போன்ற குறைகளை கண்டுபிடித்தால் காலை 8.30 மணிக்கே உறுதி செய்து உரிய உயர் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கான மாற்று ஏற்பாடுகளை அவர்கள் செய்து தருவார்கள். காலை 9.30 மணிக்கு மேல் இது போன்ற குறைகளை தெரிவித்து தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்கவேண்டும். போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கோடை வெயில் தொடங்கி விட்டதால் மாணவர்களுக்கு ஒவ்வொரு தேர்வு அறை அருகிலும் சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான குடிநீரை வைக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கும் தண்ணீர் புதியதாக வைக்க வேண்டும். சிஇஒ உள்ளிட்ட பறக்கும்படையினர் இந்த குடிநீரை பருகி அதன் சுத்ததன்மையை உறுதி செய்வார்கள்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: